சென்னை: பால் கொள்முதல் சரிவையும் அதனால் ஏற்படும் இழப்பையும் மறைக்க, சில்லறை தட்டுப்பாடு, ஊட்டச்சத்துக் குறைபாடு என பொய் காரணங்களை கூறி, பச்சை நிற பால் பாக்கெட் உற்பத்திக்கு சமாதி கட்ட ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினில் பால் கொள்முதல் மீண்டும் சரிவடையத் தொடங்கியிருக்கும் நேரத்தில், பால் கொள்முதலை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை, பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை மற்றும் ஆவின் நிர்வாக மேற்கொள்ளாமல், பால் விற்பனை விலையை மட்டும் உயர்த்தும் நோக்கில் "கிரீன் மேஜிக் ப்ளஸ்" எனும் பெயரில், 50மிலி அளவு குறைவான, லிட்டருக்கு ரூ.11.00 விற்பனை விலை அதிகமான புதிய வகை பாலினை அறிமுகம் செய்ய முடிவெடுத்திருப்பது அதிர்ச்சியை தருகிறது.
கிரீன் மேஜிக் ப்ளஸ்: இது குறித்து ஆவின் நிர்வாக இயக்குநர் சு.வினித் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 2019-2020ஆம் நிதியாண்டில் தினசரி பால் விற்பனை 23 லட்சம் லிட்டராக இருந்தது. அவை 2024 - 2025 நிதியாண்டில் 7லட்சம் லிட்டர் உயர்ந்து, 30 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. ஆவின் பால் விற்பனையை அனைத்து நகர வெளிப்புறப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யும் வகையில், சுமார் 2 லட்சம் லிட்டர் பால் விற்பனை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குழந்தைகள் மற்றும் பொதுமக்களிடையே வைட்டமின் ஏ மற்றும் டி சத்துக் குறைபாடு இருப்பதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அதற்கு ஏற்றவாறு 4.5 சதவீதம் கொழுப்பு சத்து மற்றும் 9 சதவீதம் இதர சத்துக்களுடன் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட "கிரீன் மேஜிக் ப்ளஸ்" புதிய வகையான பாலினை அறிமுகம் செய்துள்ளோம்.
மேலும், சில்லறை விற்பனையாளர்களின் (பால் முகவர்கள்) குளிர்சாதன செலவினங்களை கருத்தில் கொண்டு, புதிய வகை பால் விற்பனை விலைக்கான கமிஷன் தொகையை சற்று அதிகப்படுத்தி, கிரீன் மேஜிக் ப்ளஸ் பாலினை குறைந்த அளவில் உற்பத்தி செய்து அதனுடைய சந்தையை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சில்லறை தட்டுப்பாடு காரணமாக 450மிலி பாக்கெட் ரூ.25க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது 100 சதவீதம் மக்களை ஏமாற்றும் செயல் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
இதையும் படிங்க: பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்வு.. ஆவின் நூதன மோசடி? - டிடிவி தினகரன் கண்டனம்
கடந்த 2019-2020ல் பால் விற்பனை 23 லட்சம் லிட்டராக இருந்தாலும், அதிமுக ஆட்சியில், பால் கொள்முதல் 33.84 லட்சம் லிட்டராக இருந்து 38.26 லட்சம் லிட்டர் வரை சென்று உச்சம் தொட்டது. ஆனால், 2021ல் திமுக ஆட்சியில் ஆவின் பால் விற்பனை விலை குறைக்கப்பட்ட பிறகு, கடந்த நான்கு ஆண்டுகளில் விற்பனை படிப்படியாக உயர்ந்து தற்போது 7 லட்சம் லிட்டர் உயர்ந்துள்ளது. ஆவினுக்கான பால் கொள்முதல் படு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பால் விற்பனை உயர்ந்தது போல், பால் கொள்முதலும் இணையாக உயர்ந்திருந்தால் மட்டுமே மக்களுக்கான பாலினை தரமானதாகவும், தட்டுப்பாடின்றியும் கொடுக்க முடியும்.
ஆவினுக்கான பால் கொள்முதல் நிலவரம்: கடந்த 2019-2020ம் நிதியாண்டோடு (33.84லட்சம் லிட்டர்) ஒப்பிடுகையில், 2024-2025ம் நிதியாண்டில் பால் கொள்முதல் 32லட்சம் லிட்டர் மட்டுமே. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இருந்த பால் கொள்முதலை விட தற்போது சுமார் 1.84லட்சம் லிட்டர் குறைவாக பால் கொள்முதல் செய்து, 7லட்சம் லிட்டர் பால் விற்பனை அதிகரித்துள்ளது என்றால், கூடுதலாக விற்பனையாகும் 7லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்வதற்கான பாலுக்கு ஆவின் நிர்வாகம் என்ன செய்கிறது.? ஆவின் நிர்வாகத்தின் தற்போதைய செயல்பாடுகள் புரியாத மர்மமாகவும், சந்தேகத்திற்குரியதாகவும் இருக்கிறது.
பால் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தம்: தமிழ்நாட்டில் வைட்டமின் ஏ மற்றும் டி சத்து குறைபாடு இருப்பதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளதாக ஆவின் நிர்வாக இயக்குநர் கூறியுள்ளார். அந்த ஆராய்ச்சி தமிழ்நாட்டில் எந்த மாவட்டங்களில், எந்த காலகட்டத்தில் நடத்தப்பட்டது? ஆவின் நிர்வாகம் தமிழக மக்களை திட்டமிட்டு ஏமாற்றும் செயல். ஆவின் நிர்வாகம் தற்போது 70 சதவீதம் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தியுள்ளது.
புதிய வகை கிரீன் மேஜிக் ப்ளஸ் பாலின் விற்பனையை அதிகப்படுத்தி, ஏற்கனவே விற்பனையில் உள்ள கிரீன் மேஜிக் பாலின் விற்பனைக்கு சமாதி கட்டும் எண்ணத்தில், பால் விற்பனையில் ஈடுபட்டு வரும் சில்லறை விற்பனையாளர்களின் குளிர்சாதன செலவினங்களை கவனத்தில் கொண்டு, ஆவின் கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை அதிகமாக்கி தரப் போவதாக ஆசை வார்த்தைகளை அள்ளி தெளித்துள்ளது.
பால் கொள்முதல் சரிவு: தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினுக்கான பால் கொள்முதல் மீண்டும் சரிவடையத் தொடங்கியுள்ள நிலையில், பால் பாக்கெட்டுகள் உற்பத்திக்கு பற்றாக்குறை ஏற்பட்டு மீண்டும் வடமாநிலங்களில் இருந்து வெண்ணெய் வாங்க வேண்டிய சூழலுக்கு ஆவின் நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. இதனால், 22.00 ரூபாய் விலையுள்ள 500மிலி 4.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட கிரீன் மேஜிக் பாலினை கிரீன் மேஜிக் ப்ளஸ் எனும் பெயரில் 450மிலி பாக்கெட் 25.00ரூபாய்க்கு அளவு குறைவு, விலை கூடுதல் என அறிமுகம் செய்கிறது.
பொதுமக்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாட்டை தடுக்க வேண்டும், சில்லறை விற்பனையாளர்களின் நலனை பேணுவதும், எதிர்கால பால் தேவையை கவனத்தில் கொண்டும் செயல்படுவதும் தான் உண்மையில் ஆவின் நிர்வாகத்தின் எண்ணமாக இருக்குமானால், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தில், தமிழக பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துகள் செறிவூட்டப்பட்ட புதிய வகை பாலினை தினசரி வழங்க ஆவின் நிர்வாக பரிந்துரை செய்திருக்கலாம்.
இதையும் படிங்க: ஆவின் கூறுவது பொய்.. தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் கூறுவது என்ன?
புதிய வகை பால் அறிமுகம் செய்வதற்கு சில்லறை தட்டுப்பாட்டை ஒரு காரணமாக ஆவின் நிர்வாகம் கூறுவது தமிழகத்தில் சில்லறை தட்டுப்பாடு இருப்பது போல் ஒரு மாயை பிம்பத்தை ஏற்படுத்துகிறது. ஆவின் நிர்வாக இயக்குநர் வினித் தனது செய்திக் குறிப்பை மட்டுமல்ல, ஆவின் கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் அறிமுகத்தையும் உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
மேலும், பால் உற்பத்தியாளர்கள் கோரும் கொள்முதல் விலை உயர்வை தருவதற்கு, கூட்டுறவு பால் நிறுவனங்களின் அமுல் நிறுவனம் போல புதிய வகை பாலினை அறிமுகம் மற்றும் அதன் கூடுதல் விற்பனை விலை உயர்வில் பால் உற்பத்தியாளர்களுக்கு எத்தனை சதவிகிதம் வழங்கப்படும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.