நீலகிரி: உதகை அருகே உள்ள மரவியல் பூங்கா பகுதியில், தனியாருக்குச் சொந்தமான இடத்தில் 30 அடி உயரத்திற்கு தடுப்புச் சுவர் அமைப்பதற்கான பணிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 30 அடி உயரத்திற்கு தடுப்புச் சுவர் அமைக்கும் பணியில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று (மார்ச் 13) காலை வழக்கம் போல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, திடீரென மண்சரிந்து விழுந்ததில் பணியில் ஈடுபட்டிருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரிஸ்வான் (22) மற்றும் ஜாகீர் (25) ஆகியோர் மண்ணில் புதைந்தனர். இதனை அறிந்த மற்ற பணியாளர்கள், உடனடியாக காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர், ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு மண்ணில் புதைந்த கூலித் தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற பகுதியை, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் நேரில் ஆய்வு மேற்கொண்டார். உதகை நகராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கட்டுமானப் பணிக்கு முறையான அனுமதி பெறாமல், இப்பணி நடைபெற்று வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனிடையே மண்ணில் புதைந்த 2 நபர்களுள் ஒரு நபர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர், மண்ணில் புதைந்த மற்றொரு நபரான ரிஸ்வானும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக, மேட்டு உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மயக்க நிலையில் இருந்த ரிஸ்வான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னதாக, கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி லவ்டேல் காந்திநகர் பகுதியில் தடுப்புச் சுவர் கட்டுமானப் பணி என்பது, மண் சரிவு ஏற்பட்டு ஆறு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த சோகம் மறைவதற்குள், மீண்டும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி உயிரிழந்தது உள்ளூர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கோயில் திருவிழாவுக்கு வந்த 17 வயது சிறுமிக்கு கூட்டுப்பாலியல் தொல்லை.. திருப்பூரில் நிகழ்ந்த கொடூரம்.. 7 பேர் அதிரடி கைது!