சென்னை: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியான சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, சங்கர்ராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. அப்போது, ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ராஜசேகரன், குற்றம் சாட்டப்பட்ட சங்கராச்சாரியார், உயர் நீதிமன்ற மதுரை கிளை பிரிவு அதிகாரி மற்றும் சங்கராச்சாரியாருக்கு வேண்டப்பட்ட கவுரி காமாட்சி ஆகியோருடன் தொலைப்பேசியில் பேசியதாகப் புகார் கூறப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக, உயர்நீதிமன்றம் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணை மற்றும் காவல் துறை அதிகாரி நடத்திய உண்மை கண்டறியும் விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ராஜசேகரனுக்கு எதிராக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாகா, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் நடத்திய இந்த விசாரணையின் அடிப்படையில், ராஜசேகரனை பணிநீக்கம் செய்து 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவை எதிர்த்து, முன்னாள் நீதிபதி ராஜசேகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "நீதிபதிகள் மிகுந்த நேர்மையுடன் இருக்க வேண்டும். இந்த வழக்கில் முன்னாள் நீதிபதி ராஜசேகரனின் நேர்மையைச் சந்தேகிக்கும் வகையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன" என்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் கூறினர்.
மேலும், ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ராஜசேகரனைப் பணி நீக்கம் செய்த உத்தரவை உறுதி செய்து, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: அதிமுக கொடி, இரட்டை இலை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை - சென்னை உயர் நீதிமன்றம்!