சென்னை: விலங்குகள் நல வாரியத்தின் சான்றிதழ் இல்லாமல் மாடுகளை, அண்டை மாநிலங்களுக்கு வாகனங்களில் கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சோதனை நடத்த தமிழக அரசு மற்றும் இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மிருக வதை தடைச் சட்ட விதிகளை மீறி, விலங்குகள் கொண்டு செல்லப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.ஜி.பி. தரப்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தனி நபர்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்தினர். மேலும், டி.ஜி.பி. பிறப்பித்த சுற்றறிக்கையைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், சந்தேகத்துக்கு இடமான வகையில் மாடுகள் கொண்டு செல்லப்படுவதைக் கண்டறிந்தால், சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடிகள், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் இந்திய விலங்குகள் நல வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியும், அதன் சார்பில் எவரும் ஆஜராகாதது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், வழக்கை இறுதி விசாரணைக்காக ஜூன் 27ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர். அன்றைய தினம் விலங்குகள் நல வாரியம் தரப்பில் எவரும் ஆஜராகாவிட்டால், விலங்குகள் நல வாரிய செயலாளருக்கு எதிராக வாரன்ட் பிறப்பிக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.