சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டுவைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, கடந்த 2023 மார்ச் மாதத்தில் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட்டது.
அந்த ஒரு நபர் ஆணையம் இரு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணன் ஆணையம் இரண்டு முறை நேரடியாக வேங்கைவயல் கிராமத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டது. அது சம்பந்தப்பட்ட அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் தொடர்ந்து அவகாசம் வழங்கி வந்தது.
இந்த நிலையில், தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, "வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் அசுத்தம் செய்யப்பட்டது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டு 15 மாதங்களாகியும், புலன் விசாரணையில் ஏன் தாமதம்? விசாரணை எப்போது முடிக்கப்படும்?" என நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.
தொடர்ந்து காவல்துறை தரப்பில், சுமார் 337 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், மூன்று மாதங்களில் புலன் விசாரணை முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், மனுதாரர் தரப்பில், இந்த விவகாரத்தில் மாநில அரசு தீவிரம் காட்டாததால், கிராம மக்கள், மக்களவை தேர்தலைப் புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஜூலை 3ஆம் தேதிக்குள் காவல்துறை விசாரணை முடிக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையைத் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: நயினார் நாகேந்திரனின் வேட்பு மனுவை நிராகரிக்கக் கோரி மனு..நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு