சென்னை: ஒவ்வொரு பஞ்சாயத்திலும் இறந்தவர்கள் மற்றும் இடம் மாறிய வாக்காளர்களின் பெயர்களை நீக்கி ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய வாக்காளர் பட்டியலை தயாரிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தேர்தல் ஆணைய பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2019ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளதால், ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேலும், பஞ்சாயத்துத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதற்காக, வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையத்திடம், மாநில தேர்தல் ஆணையம் அனுமதி கோரியுள்ளது.
இந்நிலையில், தற்போதைய வாக்காளர் பட்டியலில் இருந்து, இறந்தவர்கள் மற்றும் புலம் பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்கக் கோரி, அதிமுக வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் மதுரை வீரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "இறந்தவர்கள் மற்றும் இடம் மாறிய வாக்காளர்களின் பெயர்களை நீக்காவிட்டால், அந்தப் பெயர்களில் கள்ள ஓட்டுக்கள் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது" என சுட்டிக்காட்டி உள்ளார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர் ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் நெடுஞ்செழியன் ஆஜராகி, வாதம் வைத்தார். அதையடுத்து மனுவுக்கு நவம்பர் 28 ஆம் தேதி பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க: "மருத்துவமனைகளைத் தாக்கினால் கடும் நடவடிக்கை" - டிஜிபி வார்னிங்!