சென்னை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கிழக்கு கோபுரம் முன்பு ரூ. 6 கோடி செலவில் வணிக வளாகம் கட்ட அறநிலையத்துறை அனுமதியளித்து கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி கோயில் வழிபாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், “புராதன கட்டிடமான ராஜகோபுரத்தின் முன் வணிக வளாகம் கட்டுவது, கோயிலின் விழாக்களுக்கு இடையூறாக அமையும். விழா காலங்களில் பக்தர்கள் பங்கேற்க தடையாக இருக்கும். கோயில்களில் கட்டுமானங்கள் மேற்கொள்வது தொடர்பாக, மாநில அளவிலான குழுவின் ஒப்புதல் பெறப்படவில்லை. எனவே, வணிக வளாகம் கட்ட அனுமதி வழங்கிய அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் அருண் நடராஜன், “வணிக வளாகம் ராஜகோபுரத்தின் பார்வையை தடுக்காது. இங்கு அமைக்கப்படும் கடைகளில் பக்தர்கள் வசதிக்காக பூக்கள் மற்றும் பூஜை பொருள்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். கோயில் வளாகத்துக்கு வெளியில் தான் இந்த வணிக வளாகம் கட்டப்படும்” என்று விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: கல்யாண ராணி சத்யாவுக்கு ஜாமின்! நீதிபதி சொன்ன காரணம்!
இதை மறுத்த மனுதாரர், “திறந்த வெளியில் கட்டுமானம் கட்டினால் பக்தர்கள் சிரமத்தை எதிர்கொள்வர். கோபுரத்தின் முன்பு கட்டுமானம் மேற்கொள்வதன் மூலம் கோயில் அஸ்திவாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, வணிக வளாகம் கட்டுமானம் தொடர்பான வரைபடங்களை பார்வையிட்ட நீதிபதிகள், கோயில் முன்பு திறந்த வெளியில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வணிக வளாகம் கட்டுவது அவசியம் தானா? என கேள்வி எழுப்பினர். மேலும், ராஜகோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டும் திட்டத்தை ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது? என்று விளக்கம் அளிக்கும்படி அறநிலைய துறை தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.