சென்னை: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் குழந்தைகளின் வீடு பள்ளியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் இருப்பதால் சேர்க்க முடியாது என பள்ளி நிர்வாகம் மறுத்துள்ள நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கோயம்புத்தூரைச் சேர்ந்த தீபக் மற்றும் இளங்கோ ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், “கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தங்கள் குழந்தைகளுக்கு மழலையர் பள்ளியில் சேர்க்க விண்ணப்பித்ததாகவும், குழந்தைகளின் வீடு பள்ளியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் இருப்பதால் சேர்க்க முடியாது என பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து தங்கள் குழந்தைகளைச் சேர்க்க தனியார் பள்ளிக்கு உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குழந்தைகளின் வீடு 1 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்ததால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மேலும், குழந்தைகளின் பெற்றோர் வெவ்வேறு முகவரியில் விண்ணப்பித்துள்ளனர். குறைவான இடங்களுக்கு அதிகமானோர் விண்ணப்பித்ததால் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. மேலும், அங்கன்வாடி மையங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சேர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “பல்வேறு உயர் நீதிமன்றங்கள் தங்கள் தீர்ப்பில், பள்ளியின் அனுமதிக்கப்பட்ட இடங்கள் நிரப்பப்படாத நிலையில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்கலாம் என தெரிவித்துள்ளன. மேலும், மழலையர் வகுப்பில் சேர்க்க 6,000 ரூபாய் முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 16 ஆயிரத்து 477 ரூபாய் வரை தமிழக அரசு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்க்க தனியார் பள்ளிகளுக்கு வழங்குகிறது.
அதனால், மாணவர்களை சேர்க்க முடியாது என்ற தனியார் பள்ளியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மாணவர்களை உடனடியாக சேர்க்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: “மத்திய விசாரணை அமைப்பு சிபிசிஐடிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” 2019 நீட் ஆள்மாறாட்டம் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!