கள்ளச்சாராய வழக்குகளில் இதுவரை எத்தனை பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது? - உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி! - illegal liquor issue - ILLEGAL LIQUOR ISSUE
Illegal Liquor Issue: கள்ளச்சாராய வழக்குகளில் இதுவரை எத்தனை பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published : Sep 4, 2024, 7:19 PM IST
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரி அதிமுக, பாமக, பாஜக மற்றும் தேமுதிக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் வின்பனை தொடர்பாக 1,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மாதவரத்தில் இருந்து மெத்தனால் கள்ளக்குறிச்சி கொண்டு செல்லப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்து விட்டது. அரசியல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை. குற்றம் செய்தவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் தொடர்ந்து கள்ளச்சாராய மரணம் நடந்து வருவதால் வழக்கை சிபிஐ விசாரணைக்கை மாற்ற வேண்டும். கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை காவலர்களுக்கு தெரியாமல் செய்ய முடியாது. அதிகாரிகள் தொடர்பு இல்லாமல் கள்ளச்சாராய விற்பனை தமிழகத்தில் சாத்தியம் இல்லை" என தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கள்ளச்சாராய மரணம் குறித்து அரசுக்கு எப்போது தகவல்கள் கிடைத்தது? கள்ளச்சாராயம் அருந்தியதாகவும், பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து காவல்துறைக்கு தெரியுமா? தெரியாதா? மருத்துவர்கள் தகவல் தெரிவித்த பின்னர் தான் காவலர்களுக்கு தெரிந்ததா?
தொடர்ந்து கள்ளச்சாராய புழக்கத்தை தடுக்க கண்காணிக்கப்பட்டது என்றால் காவலர்களுக்கு ஏன் தெரியவில்லை?. எப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்? எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டனர்? எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்? என பதிலளிக்க வேண்டும்.
ஆதாரங்கள் இல்லாமல், சம்பவத்திற்காக எஸ்.பியை பணியிடை நீக்கம் செய்வீர்களா? கடமை செய்ய தவறியதற்காக எஸ்.பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்றால் ஒரு மாதத்தில் என்ன மாறுதல் ஏற்பட்டது? அவரின் பணியிடை நீக்கம் திரும்ப பெறப்பட்டது.
தமிழகத்தில் கள்ளச்சாராய வழக்குகளில் இதுவரை எத்தனை பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது? மற்ற மாவட்டங்களில் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதன? என்பவை குறித்ு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு (செப் 05) ஒத்திவைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : கெட்டுப் போன காஃபி ரூ.160? சென்னை திரையரங்கிற்கு அபராதம் - consumer court penalty for PVR