சென்னை: கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆண்டு விழாவின் போது கரோனா விதிகளை முழுமையாகப் பின்பற்றாமலும், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகக் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கு கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு வீட்டு வரி, மின்சாரக் கட்டணம், பால் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கு கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அதேபோல, கடந்த 2022ஆம் ஆண்டிலேயே அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடத்தியபோது சட்டவிரோதமாக ஒன்று கூடியதுடன், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கு கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவை உள்ளிட்ட 6 வழக்குகளை ரத்து செய்யக் கோரியும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (மார்ச்.12) விசாரணைக்கு வந்தது. வழக்குகளை விசாரித்த நீதிபதி எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 6 வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் தூத்துக்குடி.. தேர்தல் பணிக்காக 10,000 பணியாளர்கள் பட்டியல் தயார்!