சென்னை: சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மற்றொரு நபருடன் பணத்திற்காக உறவில் இருக்க கட்டாயப்படுத்துவதாகவும் கூறி சாலிகிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் முனுசாமியை போலீசார் கடந்த மே மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி கார்த்திக் முனுசாமி சார்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கார்த்திக் முனுசாமிக்கு ஜாமீன் வழங்க மறுத்து, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்திக் முனுசாமி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி டி.வி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாவும், இந்த வழக்கில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணைக்கு அழைக்கும்போது காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.