சென்னை: மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கைதான நபருக்கு தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மே.07ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி இன்று (மே.06) சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விக்கிரவாண்டி அருகே மொபைல் போன் பயன்படுத்தியதாகக்கூறு கணவன் தன் மனைவியைத் திட்டியுள்ளார். இதனால், மனமுடைந்த மனைவி தன் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கணவன் கோபிநாத் கைது செய்யப்பட்டு கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது சிறையில் உள்ள கோபிநாத்தின் தந்தை நாகராஜன், கடந்த மே 04 ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார். தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்ககோறி, கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் கேட்டு, மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த ஜாமீன் மனுவானது, நீதிபதி குமரேஷ் பாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோபிநாத் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மகேந்திர பாபு, கோபிநாத்தின் தந்தை இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் எனவும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனை கேட்ட நீதிபதி, கோபிநாத்திற்கு தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள மே.07ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், 10 ஆயிரம் ரூபாய்க்கான தனிநபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் அரசு செலவில் ஏற்பாடு செய்து வழங்க வேண்டும் என்றும் கூறிய அவர், தொடர்ந்து மே.08ஆம் தேதி சிறைத்துறை அதிகாரிகள் முன்பு சரணடைய வேண்டும் என்ற நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.