திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பெண் காவல் ஆய்வாளரை அறைந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரனுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த டிசம்பர் 27ம் தேதி ‘ஆருத்ரா’ தரிசன விழாவின் போது பக்தர்களுக்கு இடையூறாக நின்றிருந்த தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், திருவண்ணாமலை நகராட்சியின் முன்னாள் தலைவருமான ஸ்ரீதரனை ஒதுங்கி நிற்கும்படி, தேசூர் காவல் நிலைய பெண் ஆய்வாளர் காந்திமதி கூறியிருக்கிறார்.
ஆத்திரமடைந்த ஸ்ரீதரன், பெண் ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பெண் ஆய்வாளர் அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி ஸ்ரீதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நேற்று (பிப்.5) நீதிபதி சி.வி.கார்த்திகேயன், இரண்டு வாரங்களுக்கு விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டுமென நிபந்தனையுடன், ஸ்ரீதரனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கூகுள் மேப் மூலம் செல்போன் திருடனை பிடித்த இளைஞர்! இணையத்தில் பகிர்ந்த ருசிகர தகவல்!