சென்னை: தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், சனாதனத்திற்கான அர்த்தத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேடிக்கொண்டிருப்பதாகவும், கோடநாடு கொலை கொள்ளை வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக ஒளிந்திருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கருத்தை வெளியிட்டிருந்தார்.
இதுதொடர்பாக உதயநிதிக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் 1 கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்றம், உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேச இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், தனக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை நிராகரிக்கக்கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிராகரிப்பு மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, "எதன் அடிப்படையில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது?" என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் E.V.சந்துரு, "இந்த விவகாரத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு முகாந்திரமே இல்லை" என தெரிவித்தார்.
மேலும், "பொது வாழ்வில் இருக்கும் நபர் ஒருவர் குறித்து பொதுவாழ்வில் இருக்கும் மற்றொரு நபர் பேசியதில் தவறில்லை என்றும், பொது வெளியில் நடந்ததைப் பற்றியே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாகவும் தனிப்பட்ட விவகாரம் குறித்துப் பேசவில்லை" என்றும் வாதிட்டார்.
இதனை அடுத்து, உதயநிதி ஸ்டாலினின் மனு குறித்து எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், "கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்படுத்திப் பேச உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சதீஷ்குமார், கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்படுத்திப் பேச உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி விதிமீறல் கட்டிடங்கள்; அதிகாரிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனரா? - மதுரைக் கிளை கேள்வி!