சென்னை: முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றங்கள் விடுதலை செய்ததையடுத்து, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை விமர்சித்ததாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக சவுக்கு சங்கர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டி, சவுக்கு சங்கரின் மனுவை பட்டியலிட பதிவுத்துறை மறுப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யக் கோரி சவுக்கு சங்கர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ஈஷா மைய வளாகத்தில் தகன மேடை? - உச்சநீதிமன்றத்தில் தமிழக காவல்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சவுக்கு சங்கரின் மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்வதற்காக வழக்கை பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.
இந்நிலையில், அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது குறித்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம் சுப்ரமணியம், சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “தலைமை வழக்கறிஞர் அனுமதி மறுத்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு பிரிவு 15ன் படி வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை. ஆர்.எஸ்.பாரதியின் கருத்து குறித்து சம்பந்தப்பட்ட நீதிபதியே அவமதிப்பு நடவடிக்கை எடுக்காத நிலையில், அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை” என உத்தரவிட்டுள்ளனர்.