சென்னை: கடந்த 10 ஆண்டுகளில் பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி, நந்தனம் அரசு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எனவும், எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? என்ற விவரத்தையும் அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து வந்த திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த மாணவர் சுந்தர், கடந்த அக்டோபர் 4ஆம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். அவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தொடர்ந்து, அக்டோபர் 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட மாணவர் சுந்தர், 4 நாட்களுக்குப் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, உயிரிழந்த மாணவனின் தந்தை ஆனந்தன் அளித்த புகாரின் பேரின் பெரியமேடு காவல்துறையினர், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 7 பேரை கைது செய்து அவர்களுக்கு எதிராக கொலை (103) வழக்கு பதிவு செய்தனர்.
அதையடுத்து, கைது செய்யப்பட்ட 2 மாணவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, மருத்துவமனையில் சமூக சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி விடும்? என்ற தவறான எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் உருவாக்கக் கூடாது என கருத்து தெரிவித்து, ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்துள்ள மாணவர்களின் பெற்றோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
தற்போது இந்த வழக்கு இன்று (நவ.14) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறையில் இருக்கும் தன் மகன்களை வெளியில் கொண்டுவர துடிக்கும் பெற்றோர்கள், உயிரிழந்துள்ள மாணவனின் குடும்ப நிலை என்ன என்பதை உணர வேண்டும். அதற்காகத்தான் அவர்களை இந்த நீதிமன்றத்திற்கு ஆஜராக உத்தரவிட்டது எனத் தெரிவித்தார்.
மேலும், இதுபோல குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மாணவரின் பெற்றோர்கள் பெரும்பாலும் ஏழ்மை நிலையில் தான் உள்ளனர்? தாய் பாத்திரம் கழுவும் வேலை செய்கிறார். தந்தை விவசாயிகளாக இருக்கிறார். இவர்களது பிள்ளைகள் தான் இது போன்ற குற்றச்செயலில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி ஏற்படுத்த வேண்டும்.
கல்லூரிக்கு செல்லும் போது ரயில் தினம், பஸ் தினம் கொண்டாடும் போதும் மோதல்கள் ஏற்படுகிறது. நல்ல வேலை விமானத்தில் மாணவர்கள் கல்லூரிக்கு போவதில்லை. கடந்த 10 ஆண்டுகளில் பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி, நந்தனம் அரசு கல்லூரி மாணவர் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகள் சமரசம் செய்யப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? என்ற விவரத்தை காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்