சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "தலைமை ஆசிரியையாக உள்ள தனது மனைவிக்கு ஒரு வழக்கு தொடர்பாக சம்மன் வழங்க நீதிமன்ற பெண் பணியாளர் வந்துள்ளார்.
ஆனால், சம்மனை வாங்க தலைமை ஆசிரியை மறுத்துள்ளார். அப்போது அங்கு வந்த வெங்கடேசன் நீதிமன்ற ஊழியரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து கீழமை நீதிமன்றத்தில் நிவாரணம் பெற அறிவுறுத்தப்பட்டது. ஆனால், கீழமை நீதிமன்றம் நிவாரணம் வழங்காததால் மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதில், 'கடந்த மாதம் நடைமுறைக்கு வந்த பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள், தாக்குதல்கள், திருமண குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குற்ற பேரங்கள் இச்சட்டத்தில் பொருந்தாது. அதனால், கீழமை நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு முடிந்ததும், குற்றம்சாட்டப்பட்டவரின் விளக்கத்தை கேட்க வேண்டும்.
தண்டனை குறைப்பு பேரம் பெற தகுதியானவர்களிடம் அதுகுறித்து கீழமை நீதிமன்றம் விளக்கமாக தெரிவிக்க வேண்டும். பின்னர் குற்றம்சாட்டப்பட்டவர்கள் 30 நாட்களுக்குள் பேரத்திற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த வழக்கை பொருத்தவரை தண்டனை குறைப்பு பேரம் கோரி மனு அளித்தால் நீதிமன்றம் கருத்தில் கொண்டு, கீழமை நீதிமன்றம் சட்டப்படி முடித்து வைக்க வேண்டும்' என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்