சென்னை: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை பாடியநல்லூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பார்த்திபன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய சண்டே சதீஷ், முத்து சரவணன் ஆகிய இருவரும் போலீசாரால் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் சோழவரத்தை அடுத்த பூதூர் மாரம்பேடு பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து இருவரையும் பிடிக்க சென்றபோது, இருவரும் தப்பிக்க முயன்றதாகக் கூறி பூந்தமல்லி காவல் நிலைய துணை ஆணையர் ஜவஹர் தலைமையிலான காவல்துறையினர் என்கவுண்டரில் சண்டே சதீஸ் மற்றும் முத்து சரவணன் ஆகிய இருவரையும் சுட்டுக் கொன்றனர்.
இந்த நிலையில் காவல்துறை நடத்திய என்கவுண்டரில் சந்தேகம் உள்ளது என்றும் தனது மகன் தப்பிக்க முயற்சி செய்ததால் தான் சுட்டு கொல்லப்பட்டார் என்று காவல்துறை கூறும் தகவல் தவறு என்றும் காவல்துறைக்கு எதிரான வழக்கை அவர்களே விசாரித்தால் உண்மை வெளிவராது எனப் பல்வேறு காரணங்களைக் கூறி, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி முத்து சரவணனின் தந்தை கோவிந்தராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று(பிப்.12) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, ஏற்கனவே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றும்படி பரிந்துரைத்து தமிழக டிஜிபி-க்கு ஆவடி காவல் ஆணையர் ஜனவரி 18ஆம் தேதி கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதற்கு இன்னும் டிஜிபி-யிடமிருந்து பதில் வரவில்லை என்பதால் வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்று ஆவடி காவல்துறை சார்பில் கேட்கப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை மார்ச் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தமிழக அரசின் உரை புறக்கணிப்பா..? ஆளுநர் மாளிகையின் விளக்கம் என்ன?