மதுரை: ''ஆண்டிப்பண்டாரம்'' எனும் சமூகத்தின் பெயரை யாரும் இழிவாகப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (ஏப்.30) விசாரணைக்கு வந்த நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் இது குறித்து பதிலளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திரைப்படங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் ''ஆண்டிப்பண்டாரம்'' எனும் சமூகத்தின் பெயரை இழிவாகப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி புதுக்கோட்டையைச் சேர்ந்த கலாதேவி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “சமீப காலமாக "ஆண்டிப்பண்டாரம்" எனும் வார்த்தையைத் திரைப்படங்களிலும், சீரியல்களிலும் பயன்படுத்துவது அதிகரித்த வருகிறது. அதுவும் இழிவு படுத்தும் விதமாகவே அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த ஆண்டில் கர்ணன் படம் வெளியான நிலையில், அதில் பண்டாரத்தி எனும் வார்த்தையைப் பயன்படுத்திப் பாடல் வெளியானது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அந்த வார்த்தை அகற்றப்பட்டு, வேறு வார்த்தையுடன் அப்பாடல் வெளியானது.
நீதிமன்றம் தலையிட்டும் ''ஆண்டிப்பண்டாரம்'' என்ற வார்த்தை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை. ஆகவே 2003, 2012, 2021 ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களில் பண்டாரம் எனும் வார்த்தை தவறாகப் பயன்படுத்தப்பட்டதன் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்குகளை விரைவாக முடிக்க உத்தரவிட வேண்டும்.
மேலும், ''ஆண்டிப்பண்டாரம்'' எனும் சமூகத்தின் பெயரை யாரும் இழிவாகப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கு தொடர்பாக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.