சென்னை: உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்பை நினைவு கூறும் வகையிலும், தொழிலாளர் வரலாற்றின் நெடும் போராட்டங்களை நினைவு கூறும் வகையிலும் மே 1ஆம் தேதி, சர்வதேசத் தொழிலாளர்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை தொழிலாளர்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உருண்டு கொண்டிருக்கும் உலகத்தை கைகளில் தாங்கிக் கொண்டிருக்கும் உழைப்பாளிகளின் திருநாள்; பாட்டாளி வர்க்கத்தின் உரிமை பெருநாள்; ஆலை வாயிடை கரும்பாகத் தொழிலாளர் வர்க்கம் முதலாளித்துவத்தின் பிடியில் சிக்கிச் சீரழிந்து சின்னா பின்னமாகி கொண்டிருந்தபோதுதான் 135 ஆண்டுகளுக்கு முன்பு சிகாகோவில் எரிமலை வெடித்தது.
தொழிலாளர்கள் உரிமைக்குக் குரல் எழுப்பிய போதெல்லாம் முதலாளித்துவ கொடுங்கோலர்களின் சவுக்கடியும், துப்பாக்கிச் சூடும் பரிசாகத்தரப்பட்டன. அகிலத்தின் முதல் தொழிற்சங்கம் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் இயந்திர தொழிலாளர்களின் சங்கமாக மலர்ந்தது. அங்குதான் தொழிலாளர்கள் 19, 20 மணி நேரங்கள் வேலை வாங்கப்பட்டார்கள். வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் 1806ஆம் ஆண்டு, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
1827இல் பிலடெல்பியாவில் கட்டடத் தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தில்தான் முதன் முதலாக பத்து மணி நேரம் வேலை நாள் என கோரிக்கை வைக்கப்பட்டது. தொழிற்சங்க இயக்கங்களின் அதிவேக வளர்ச்சியால் 1850களில் இக்கோரிக்கை அமெரிக்காவில் மட்டுமில்லாமல் முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்கள் சுரண்டப்பட்ட எல்லா வளரும் நாடுகளிலும் போராட்டங்கள் வலுப்பெற்றன.
8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் பொழுதுபோக்கு, 8 மணி நேரம் ஓய்வு என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு தொழிலாளர்களின் உரிமை முழக்கம் அனைத்து நாடுகளிலும் எதிரொலித்தது. அமெரிக்காவில் எட்டு மணி நேரம் வேலை கோரிக்கைக்காக 1884இல் வெடித்த போராட்டங்கள்தான் மே தினம் உருவாவதற்குக் காரணமாய் அமைந்தது.
அமெரிக்கத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு 1885 செப்டம்பர் 7ஆம் தேதி நடத்திய உழைப்பாளர் தின அணிவகுப்புகளில் தான் 8 மணி நேர உழைப்பு 1886 மே முதல் நாளிலிருந்து சட்டப்பூர்வமாக ஆக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. எட்டு மணி நேர வேலை சட்டமாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி 1886 மே முதல் நாளிலிருந்து அமெரிக்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் சிகாகோ நகரில் அனைத்து தொழில் நிறுவனங்களும் நிலைகுலைந்து போயின. அமெரிக்கா முழுவதும் தொழிலாளர் போராட்டம் வீறு கொண்டு எழுந்தது. இதனுடைய தாக்கம் உலகம் முழுவதும் தொழிலாளர்களின் உரிமைப் போர் மூண்டு எழக் காரணமாயிற்று. முதலாளித்துவ நிறுவனங்கள் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்க முயன்றன.
ஆனால், தொழிலாளர்கள் உறுதிமிக்க போராட்டத்தைத் தொடர்ந்தனர். 1886 மே 4ஆம் தேதி சிகாகோ நகரில் ஹே மார்கெட் திடலில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதலாளித்துவ அரசு காவல் படையை ஏவி ஹே மார்கெட்டில் கூடியிருந்த தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. அமைதியான ஆர்ப்பாட்டத்தில் கலவரம் வெடித்தது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
தொழிலாளர்கள் போராட்டத்தை வழி நடத்திய தலைவர்களான பார்சன்ஸ், ஸ்பீஸ், ஏங்கல் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டு 1887 நவம்பர் 11இல் தூக்கிலிடப்பட்டனர். தொழிலாளர்களின் உரிமைப் பதாகையை உயர்த்தி பிடித்துத் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட இந்த தலைவர்கள் ஹே மார்கெட் தியாகிகள் என்று மே தின வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளனர். 1888ஆம் ஆண்டு செயின்ட் லூயி நகரில் நடைபெற்ற அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு மாநாடு 1890 மே முதல் நாளில் தொழிலாளர்களை ஒன்று திரட்டுவது என்று தீர்மானித்தது.
1890 மே முதல் நாள் மிகப் பிரமாண்டமான தொழிலாளர்களின் அணிவகுப்புப் பேரணிகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், சிலி, கியூபா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாலந்து உள்ளிட்ட பல நாடுகளில் நடந்தன. அதிலிருந்து மே முதல் நாளில் உலக பாட்டாளி வர்க்கத்தின் உரிமைத் திருநாளாகத் தொழிலாளர் வர்க்கம் உலகம் முழுவதும் கொண்டாடி வருகிறது.
1990ஆம் ஆண்டில் மே தினத்தின் 100 ஆவது ஆண்டில் அன்றைய இந்தியப் பிரதமர் வி.பி. சிங்-யிடம் மே தினத்திற்கு இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நானும் குருதாஸ் குப்தா போன்ற இடதுசாரி தலைவர்களும் முன் வைத்தோம். அதனை ஏற்றுக் கொண்டு சமூக நீதி காவலர் வி.பி. சிங் மே தினத்திற்கு விடுமுறை அறிவித்து ஆணை பிறப்பித்தார்.
கடந்த பத்தாண்டுகளாக நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறித்து வருகிறது. தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளான பணி நிரந்தரம், போராடும் உரிமை, ஓய்வூதியம், வேலை உத்தரவாதம் ஆகியவற்றை நிராகரிக்கும் வகையில் தொழிலாளர் விரோத சட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது. 44 தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக மாற்றி தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக, குறைந்த கூலி அடிமைகளாக மாற்றி வருகிறது.
நிரந்தர வேலை என்பதை ஒழித்துக் கட்டி நீம், எஃப்.டி.இ. போன்ற ஒப்பந்த கொத்தடிமை முறையை நிரந்தரமாக்குவது. தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு திட்டங்களைச் சிதைப்பது. எட்டு மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்துவது என தொழிலாளர் வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் மோடி அரசின் புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்புகள் மூலம் சட்ட வடிவம் பெற்றுள்ளன.
இந்நிலையில், தான் 18வது மக்களவைத் தேர்தலில் தொழிலாளர் வர்க்கம் பாஜக அரசை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றுவதற்கு உறுதி கொண்டிருக்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் உரிமைப் பதாகையை உயர்த்திப் பிடிக்க மே நாளில் உறுதி ஏற்போம். அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் மே தின நல்வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: மே 1 தொழிலாளர் தினம்; உயிராக மதிக்கும் தொழிலாளர்களுக்கு 'மே தின வாழ்த்துகள்' - முதலமைச்சர் ஸ்டாலின் - CM Stalin May Day Wishes