சென்னை: இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (ஜூன் 4) நிறைவடைந்தது. அதில், பாஜக கூட்டணி கட்சிகள் 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி கட்சிகள் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகளே வெற்றிக் கனியை பறித்துள்ளது.
அந்த வகையில், திமுக கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக (MDMK) முதன்மை செயலாளர் துரை வைகோ அபார வெற்றி பெற்றுள்ளார். அதாவது, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கருப்பையாவை விட 3 லட்சத்து 13 ஆயிரத்து 94 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து, திருச்சியிலிருந்து சென்னை வந்த துரை வைகோவிற்கு சென்னை விமான நிலையத்தில் அவரது கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ, "திருச்சியில் இமாலய வெற்றியை தந்த மக்களுக்கு என் தந்தை வைகோ மற்றும் எனது சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் திட்டங்களாலும், அது எளிய மக்களைச் சென்றடைந்ததால் தான் தமிழ்நாட்டில் 40க்கு 40 என்ற வெற்றியை மக்கள் பெற்றுத் தந்துள்ளனர்.
மேலும், என் வெற்றிக்கு உழைத்த கூட்டணி கட்சித் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வெற்றி பெறச் செய்த திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன்.
தேர்தல் முடிந்துவிட்டது, அனைத்து கட்சி நிர்வாகிகளும் மக்கள் சேவை செய்ய வேண்டும். அதிமுகவை பொறுத்தவரை எம்.ஜி.ஆர் கண்ட இயக்கம், அதுவும் திராவிட இயக்கம் தான். திமுகவுக்கு போட்டி அதிமுக, அதிமுகவுக்கு போட்டி திமுக தான். இதற்கு நடுவில் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடமில்லை" எனத் தெரிவித்தார்.