சென்னை: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சியினர் தொகுதிப் பங்கீடுக்கான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, தொகுதிப் பங்கீடு குறித்து இரண்டு முறை பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, மதிமுகவின் பேச்சுவார்த்தை குழு தலைவர் அர்ஜுனா ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இரண்டு மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடத்தை கேட்டிருந்தோம். அதற்கு திமுக இசைவு தெரிவிக்காத நிலையில், தற்போது சென்ற முறை செய்தபடி ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளோம்.
எங்கள் கட்சி சின்னத்தில்தான் நாங்கள் போட்டியிடுவோம் என உறுதியாக தெரிவித்துள்ளோம். மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும்” என தெரிவித்தார். மேலும், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் எனவும், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்தித்தால் நாங்கள் அதை ஏற்க மாட்டோம் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: சம வேலைக்கு சம ஊதியம்; 11வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்!
மாநிலங்களவை இடத்தை ஒதுக்க திமுக சம்மதம் தெரிவிக்கவில்லை, ஒதுக்கப்படக்கூடிய தொகுதியில் எது என்பது குறித்து தற்போது தெரிவிக்கவில்லை எனவும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் நாளை (மார்ச் 1) விசாரணை நடைபெறும் என்று ஒப்புதல் அளித்து, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.
இதையும் படிங்க: பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யக்கோரிய வழக்கு நாளை விசாரணை!