மயிலாடுதுறை: சித்தர்காடு பகுதியில் 1981ஆம் ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான நவீன அரிசி ஆலை தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இங்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெற்கள் பதப்படுத்தப்படுகிறது.
பின்னர், நெல் அவியல் செய்து உலர வைத்த பின்பு, அரைத்து அரிசியாக்கி குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு சுமார் 100 டன் நெல் அரவை செய்யம் இந்த ஆலையில் நெல்லை அரைக்கும்போது உமி துகள், கரித்துகள்களாக மாறி அந்த பகுதி முழுவதும் காற்றில் கலக்கும் நிலை உள்ளது.
இதனால், சித்தர்காடு, மாப்படுகை, சோழம்பேட்டை, மூவலூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்துள்ளதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் ஆலையை மூடக்கோரி பலகட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் வசந்த் என்பவர் தொடுத்த வழக்கில், கடந்த 2010ஆம் ஆண்டில் நவீன அரிசி ஆலையை மூடுவதற்கு மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன் தொடர்ந்து ஆலை இயக்கப்பட்டு வருவதால், அதனை தடுத்து ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்று கிராம மக்கள் இன்று சுடுகாட்டில் குடியேறி உண்டு உறங்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சித்தர்காடு சுடுகாட்டில் ஷாமியானா பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் சதீஸ் தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கரித்துகள் மற்றம் உமி பறக்காமல் ஆலையை இயக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
மேலும், இன்று காலை 10 மணி முதல் மயானத்தில் குடியேறி போராட்டம் நடத்தி வந்த மக்களிடம், தற்போது கோட்டாட்சியர் அர்ச்சனா, மயிலாடுதுறை டிஎஸ்பி திருப்பதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ஒரு வாரத்திற்குள் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் தற்போது போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஒரு வாரத்திற்கு தீர்வு காணவில்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடரும் என மக்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், 40 வருடங்களாக போராடி வருகிறோம். மருத்துவ முகாம் நடத்தினால் 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவரும். நாங்களும் எங்களது மகனும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது தலைமுறையாக உள்ள எங்கள் பேரன்கள் பாதிக்கப்படக்கூடாது என்று அறவழியில் உயிர் வாழ்வதற்காக போராட்டம் நடத்துகிறோம். 2 வயது குழந்தைகளுக்கு நெபுலைசர் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. நாங்கள் என்ன பாவம் செய்தோம்? பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஏமாற்றாதீர்கள் நிரந்தர தீர்வு வேண்டும் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்