மயிலாடுதுறை: அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகள் மே 28ஆம் தேதியும், நாட்டுப்படகுகள் ஜூன் 13ஆம் தேதியும் ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும், படகினை ஆய்விற்கு உட்படுத்தாமல் பின்னொரு நாளில் ஆய்வு செய்யக்கோரும் படகு உரிமையாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட மாட்டாது எனவும் மாவட்ட ஆட்சியர் இன்று (மே 15) அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983-இன் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத மீன்பிடிக் கலன்கள் அனைத்தும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையரால் நியமிக்கப்படும் பணியாளர்களைக் கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை நேரடி தள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகள் மே 28ஆம் தேதியும், நாட்டுப்படகுகள் ஜூன் 13ஆம் தேதியும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட உள்ளது.
இது குறித்த மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “படகு உரிமையாளர்கள் படகுகளின் பதிவுச் சான்று, மீன்பிடி உரிமம், வரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் அட்டை, துறை மூலம் வழங்கப்பட்ட தொலைத்தொடர்பு கருவிகள் ஆகியவைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அதனை வைத்து ஆய்வு செய்யும் நாளில், ஆய்வுக்குழுவிற்கு அனைத்து விவரங்களையும் அளித்திட வேண்டும். மேலும், அனைத்து மீன்பிடிப் படகுகளுக்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வாயிலாக தெரிவிக்கப்பட்ட வர்ணம் பூசி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
மேலும், விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட எரியெண்ணெய் வாங்கும் படகுகள் நேரடி ஆய்வின் போது ஆய்விற்கு உட்படுத்தவில்லையெனில், அப்படகுகளுக்கு விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன், அப்படகுகள் இயக்கத்தில் இல்லாததாக் கருதி அப்படகுகளின் பதிவுச் சான்றினை உரிய விசாரணைக்கு பின் ரத்து செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆய்வு நாளன்று படகினை ஆய்விற்கு உட்படுத்தாமல் பின்னொரு நாளில் ஆய்வு செய்யக்கோரும் படகு உரிமையாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட மாட்டாது” என அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: வள்ளியூர் ரயில்வே தரைப்பால மழை வெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து.. பயணிகள் பத்திரமாக மீட்பு! - Government Bus Stuck In Tirunelveli