தூத்துக்குடி: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, சிறைபிடிக்கப்படுவது மற்றும் படகை மோதி கொலை செய்வதைக் கண்டித்து இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரி, தூத்துக்குடியில் உள்ள இலங்கையைச் சேர்ந்த நபரால் நடத்தப்படும் தனியார் பர்னிச்சர் கடையை மே 17 இயக்கம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்ட பர்னிச்சர் கடை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில், தடையை மீறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே வந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து, முழக்கமிடாமல் போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது மற்றும் தாக்குதல் நடத்தப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களை கொலை செய்யும் நோக்கோடு தாக்குதல் நடத்தி கொலை செய்து வரும் இலங்கை கடற்படை மீது தமிழக காவல்துறை கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தமிழக போலீசார் இலங்கை கடற்படை மீது கொலை வழக்குப்பதிவு செய்ய தயங்குவது ஏன்?
மேலும், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தொடர்ந்து இலங்கையைச் சேர்ந்த தனியார் பர்னிச்சர் கடையை முற்றுகையிட்டு நடைபெறும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் இந்த போராட்டம் இன்று நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். அந்தக் கடைகளில் இனி தமிழர்கள் யாரும் எந்தவித பொருட்களையும் வாங்க மாட்டோம் என முடிவெடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படை மீது கொலை வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றத்தை விரைவில் நாட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் - தமிழக அரசு உத்தரவு! - TNPSC NEW LEADER SK PRABAKAR