கோயம்புத்தூர்: கோவை மாவட்ட வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மதுக்கரை வனச்சரகத்தில், ரயில் மோதி யானைகள் உயிரிழப்பைத் தடுக்கும் வகையிலான செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைப்பு தொடக்க விழா நிகழ்ச்சி, நேற்று (பிப்.9) நடைபெற்றது.
இந்த செயற்கை நுண்ணறிவு அமைப்பை தொடங்கி வைத்து, யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி மற்றும் இரவு ரோந்து செல்லும் வன ஊழியர்களுக்கு டார்ச் லைட் முதல் உதவி பெட்டிகள் ஆகியவற்றை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
பின்னர் விழாவில் பேசிய அவர், "நாட்டிலேயே முதன் முறையாக, கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்தில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைப்பு துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. கோவை வனக்கோட்டம் சுமார் 693.48 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது. கேரள மாநிலம் மற்றும் ஈரோடு, நீலகிரி மாவட்ட வன எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.
கோவை மாவட்டத்தில் மனித - யானை மோதல் கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்கு அதிகரித்து வரும் குடியிருப்புப் பகுதிகள், நிலப்பயன்பாட்டு முறை, விவசாய நடைமுறை, ஆக்கிரமிப்பு ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. வனத்தை விட்டு வெளியேறும் யானைகளைக் கட்டுப்படுத்தும் பல்வேறு வழிமுறைகளைக் கவனிக்கும் யானைகள், அதிபுத்திசாலித்தனமாக தங்களை தகவமைத்துக் கொள்கின்றன.
கோவை மாவட்டத்தில் 2021 முதல் 2023 வரையிலான 3 ஆண்டுகளில், 9 ஆயிரத்து 28 முறை யானைகள் வழி தவறி வெளியேறி உள்ளன. இப்படி வெளியேறும் யானைகள், மதுக்கரை வனச்சரக பகுதியில் ரயில் மோதி உயிரிழந்து வருகின்றன. கடந்த 2008 முதல் இதுவரை 11 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளன. எனவே, ரயில் மோதி யானைகள் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து கேரளம் செல்லும் ரயில் வழித்தடம், வனப்பகுதியைக் கொண்டது. இந்த புதிய தொழில்நுட்பத்தில், மதுக்கரை வனச்சரகத்தில் சுமார் 7 கி.மீ தொலைவில் ஏ மற்றும் பி என இரண்டு ரயில் தண்டவாளப் பகுதியில் 12 கண்காணிப்புக் கோபுரங்கள் மூலம், உயர் ரக கேமராக்களைக் கொண்டு தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.
இரவு நேரங்களில் தெர்மல் இமேஜ் மற்றும் பகல் நேரத்தில் கேமரா வீடியோ பதிவுகள் மூலம் யானைகள் நடமாட்டம் கண்காணிக்கப்படுகின்றது. அதாவது, 150 மீட்டரில் ஆரஞ்சு நிற சிக்னல்கள், 100 மீட்டரில் மஞ்சள், 50 மீட்டரில் சிவப்பு நிற எச்சரிக்கை சிக்னல்கள் பெறப்பட்டு, கண்காணிப்பு அறையில் இருந்து வனத்துறை மற்றும் ரயில்வே துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
இதன் மூலம் ரயில் ஓட்டுநருக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டு, ரயிலை மெதுவாக இயக்கிச் செல்ல முடியும். இதனால் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பைத் தடுக்க முடியும். மேலும், யானைகள் நடமாட்டத்தை செயற்கை நுண்ணறிவு மூலம் தொடர்ச்சியாக பதிவு செய்து, எதிர்காலத் திட்டமிடலுக்குத் தேவையான தரவுகளைப் பெற முடியும்" என்றார்.
தொடர்ந்து, தமிழக வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு கூறுகையில், "உலகிலேயே அதிக அறிவு பெற்ற வனவிலங்காக யானை உள்ளது. மின்வேலி மற்றும் அகழி ஆகியவைகளை எப்படி கையாண்டு, வனத்தை விட்டு வெளியேறுவது என நுணுக்கமாக தகவமைத்துக் கொள்வதில், யானை புத்திசாலியாக உள்ளது. டிரோன் மூலமும் யானைகள் நடமாட்டம் கண்டறிந்து, ரயில் மோதி உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல, ஆண்டுக்கு ஆயிரம் யானைகள் ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து செல்கின்றன. 3 ஆண்டுகளில் 3 ஆயிரம் யானைகள் ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து சென்றுள்ளது. இந்த தரவுகளை வைத்து, செயற்கை நுண்ணறிவு அமைப்பு மூலம் ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவத்தைத் தடுக்க முடியும். ரயில்வே துறை சார்பில், இரண்டு இடங்களில் யானைகள் கடந்து செல்லும் வழியில் தரைவழிப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
வனத்துறையை நவீனப்படுத்தும் வகையில், ரூ.52 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிதி மூலம், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, மாநில அளவில் செயற்கை நுண்ணறிவு மையம் அமைக்கப்பட உள்ளது" என தெரிவித்தார். மேலும், கோவை வனச்சரகத்தில் இரண்டு யானைகள் நாள்தோறும் உணவு தேடி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவதால் அதிக சேதம் ஏற்படுகிறது.
அந்த யானைகளுக்கு காலர் ஐடி பொருத்தி கண்காணிக்கும் திட்டம், அகழி மற்றும் வன எல்லையில் வேலி அமைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், வனத்துறை ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்களின் எண்ணிக்கையும் அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சுப்ரத் மொகபத்ரா, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் ராமசுப்பிரமணியன், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சீனிவாசரெட்டி, மாவட்ட வனப்பாதுகாவலர் ஜெயராஜ் மற்றும் வனச்சரகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: 977 ஒப்பந்த செவிலியர்களைப் பணி நியமனம் செய்ய அரசு அனுமதி..! அமைச்சர் மா. சுப்பிரமணியம் தகவல்..