நீலகிரி: உலக கராத்தே அமைப்பான கியோகுஷின் கராத்தே அமைப்பின் நிறுவனர், மாஸ் ஒயாமா. அவருக்கு கீழ் பல மாஸ்டர்கள் கராத்தே பயின்றுள்ளனர். அவர்களில் ஒருவரான சிகிஹான் பீட்டர் சாங் (shihan peter chong) தலைமையில் ஜப்பான் தலைநகரைத் தலைமை இடமாகக் கொண்டு கராத்தே அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது.
உலகம் முழுவதும் 128 நாடுகளில் இந்த கரத்தை அமைப்பானது இயங்கி வருகிறது. தமிழ்நாட்டிற்குத் தலைமை பயிற்சியாளராக, திருப்பூரைச் சேர்ந்த மாஸ்டர் நாகராஜன் இருந்து வருகிறார். இவர் கடந்த 22 ஆண்டுகளாக மாணவர்களுக்குக் கோடைக் கால பயிற்சிகள் நடத்தி வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டு ஒவ்வொரு மலைப்பிரதேசங்களில் தேர்வு செய்து, அங்கு மாணவர்களுடன் சென்று 2 - 3 நாட்கள் தங்கி பயிற்சி வழங்கி வருகிறார். இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், உதகை, சேலம் உள்ளிட்ட மலைத்தொடர்கள் நிறைந்த பகுதியில், மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்.
இது குறித்து மாஸ்டர் நாகராஜன் கூறுகையில், ”இந்த காரத்தே பயிற்சி மாணவர்களுக்குக் குருகுல வாழ்க்கையைப் போன்றது. பயிற்சி பெறும் மாணவர்கள், அவர்களது படுக்கை மற்றும் கழிவறையை அவர்களே சுத்தம் செய்தல், மாணவர்கள் உணவருந்தும் தட்டு, டம்ளர் போன்றவற்றைச் சுத்தம் செய்தல் உள்ளிட்ட அவர்களது தேவைகளை அவர்களே பூர்த்தி செய்யும் வகையில் பயிற்சி வழங்கப்படும். உணவு உண்ணும் போது கடவுள் வணக்கம் செய்வது, போன்றவை கடைப்பிடிக்கப்படுகிறது.
எங்களது மாணவர்கள் உலக கராத்தே போட்டி மட்டுமல்லாமல், தேசிய போட்டிகளிலும், ஆசிய நாடு போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றுள்ளனர். உலகம் முழுவதும் எங்கள் பள்ளியில் வழங்கப்படும் பயிற்சியே, இவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
மேலும், எங்கள் பள்ளியில் பயிற்சி பெறும் மாணவர்கள் உலக கராத்தே போட்டியிலும் பங்கு பெற்று உள்ளனர். மலைப்பிரதேசங்களில் பயிற்சி பெரும்போது உடல், மனம், மூளை ஆகியவை புத்துணர்ச்சி பெறும். இந்த பயிற்சியில் இடம் பெறும் மாணவர்கள் கராத்தே பள்ளியில் வழங்கப்படும் சீருடைகளை அணிந்து, பசுமை நிறைந்த மலைப் பகுதிகளில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த பயிற்சியின் மூலம் மாணவர்களுக்குத் தனிமனித ஒழுக்கம், நாட்டுப்பற்று, சமுதாயப் பற்று ஆகியவற்றை கடைப்பிடிக்க முடியும். மேலும், இதனால் மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்தவும் முடியும்" என தெரிவித்துள்ளார்.