சென்னை: சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனியில் வசித்து வரும் பெண் ஒருவர் அவரது வீட்டினை பழுது பார்க்கும் பணிக்காக சந்துரு என்ற கட்டிடக் கொத்தனாரை அணுகியுள்ளார். இதனை அடுத்து இவர் கடந்த 29ஆம் தேதி சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த வேல்முருகன் என்ற கட்டிடக் கொத்தனாரை அந்த பெண்ணின் வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.
மேலும், கொத்தனார் வேல்முருகனுடன், சித்தாள் வேலை செய்வதற்காக எம்ஜிஆர் நகர், சூலை பள்ளத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவரைச் சித்தாள் பணிக்காக அழைத்துச் சென்றுள்ளார் வேல்முருகன். இந்த நிலையில், பணிக்காக வந்த வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த பெண் சித்தாளுக்கு வேல்முருகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுமட்டும் அல்லாது, அந்த பெண் சித்தாள் இந்த சம்பவத்தை வெளியே சொல்லிவிடுவார் என்ற பயத்தில் வேல்முருகன் தன் கையில் வைத்திருந்த சுத்தியலால் பெண் சித்தாளின் பின் தலையில் கொடூரமாகத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் சித்தாள் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். மேலும், வேல்முருகன் தாக்கியபோது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது உயிருக்கு ஆபத்தான நிலையில் விழுந்து கிடந்த அந்த பெண் சித்தாளைச் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று (ஏப்.02) அதிகாலை அந்த பெண் சித்தாள் உயிரிழந்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாகப் பெண் சித்தாளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து படுகொலை செய்த திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த கொத்தனார் வேல்முருகனை எம்ஜிஆர் நகர் தனிப்படை போலீசார் திருப்பூரில் கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாகச் சென்னை அழைத்துவந்து விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டாக்டர் சுப்பையா கொலை வழக்கு; தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு மனு தீர்ப்பிற்காக ஒத்திவைப்பு!