சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வரும் மக்களவை தேர்தலில் திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளதாக ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மக்கள் நீதி மய்யம் தரப்பிலிருந்து மக்களவை தேர்தலில் 1 தொகுதியும், மாநிலங்களவையில் ஒரு இடமும் கேட்டிருந்தது.
கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து பேசினார். பின்னர், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மாநிலங்களவை (ராஜ்ய சபா) ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, இதற்கான ஆவணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. மக்களவை தேர்தலில் ஒரு இடம் கேட்டிருந்த நிலையில் மாநிலங்களவை சீட் மட்டுமே கொடுக்கப்பட்டதால் கமல்ஹாசன் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இக்கூட்டணி குறித்து நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் கிண்டல் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "எங்களை பொறுத்தவரை பிழைப்பு, பொழப்பு, முக்கியமில்லை. பதவி தான் முக்கியம். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அங்கீகார பதவி! அதை வைத்து தான் என் மண்ணின் எளிய மக்களின், வாழ்வாதார, ஜீவாதார, வேலைவாய்ப்பு, நதிநீர், குடிநீர், அரசியல் அதிகார அனைத்து உரிமையையும் வென்றெடுக்க முடியும் என்று அண்ணா, பெரியார், அம்பேத்கர், காயிதே மில்லத் மேல் ஆணையிட்டு, அறிதியிற்று, உறுதியிற்றுச் சொல்கிறேன்.
ஐயா, எங்களுடன் கூட்டணி பேச உள்ள ஆஜானுபாகுவான்களே! ஐயா, பெரியவர் ஆழ்வார்பேட்டை ஆண்டவர், பிக்பாஸ் பிதாமகன், ரெட் ஜெயன்ட், சில்வர்ஸ்ட்டர் ஸ்டாலின் வழியில் பதவி, நாடாளுமன்ற தொகுதி இல்லை என்பது போல் சொல்லி விடாதீர்கள். நாங்கள் ரொம்ப, ரொம்ப பொல்லாதவர்கள், இந்த மண்ணின் மைந்தர்கள்... பெரும் ஆர்வத்திலும் அகோர அதிகாரப் பசியிலும், இந்திய ஜனநாயகப் புலிகள் உறுமிக்கொண்டு இருக்கிறது.
இது கூண்டு புலியல்ல, வீரப்பன் காட்டு வேங்கைப்புலிகள். வேகமா தொகுதி கொடுக்கப் பாருங்க. மாவட்ட பொறுப்பாளர்கள் அடங்கு அடங்குனாலும் மறு, மறுன்னு பொறுமிகிட்டு, இருக்காங்க, பாத்துக்கங்க! அப்புறம் ரொம்ப வறுத்தப்படுவீங்க! ஆதலினால் சகல விதமான பேருக்கும், எனது உயிருக்கு உயிரான வாக்காள பெருங்குடி மக்களுக்கும் தெரிவிப்பதென்னவென்றால், மேல் படி விஷயம் தான் நமக்கு கப்பு முக்கியம் அப்பு!!” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில் கமல்ஹாசனுக்கு ஒரு நாடாளுமன்ற சீட் கூட இல்லை என்றும், திமுக அவருக்கு அல்வா கொடுத்துவிட்டதாக கிண்டலாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: மாநிலங்களவைக்குச் செல்கிறார் கமல்ஹாசன் - மக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை!