மதுரை: மதுரையிலுள்ள ஆவின் நிறுவனத்தைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வாகனங்களின் மூலமாக பால் விநியோகம் நடைபெறுகிறது எனவும், அதில் ஏதேனும் ஒரு வாகனம் பழுதானால் கூட விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டு விடுகிறது.
இதுபோன்ற சிக்கல்கள் தவிர, ஆவின் விநியோக அமைப்பில் எந்தவித குறைபாடுமில்லை என்றும், இதையும் நாங்கள் சரி செய்துவிட்டோம் எனத் தெரிவித்தார். அதேபோன்று ஆவின் பால் குடோனிலிருந்து வெளியே செல்லும் வரை பால் எதுவும் கெடுவதற்கு வாய்ப்பில்லை எனவும், எடுத்துச் செல்கின்ற வாகனங்களில் உள்ள குளிர்பதனங்களில் ஏதேனும் பழுது நேர்ந்தால் இது போன்ற தவறுகள் நிகழ்வதாக தெரிவித்தார்.
ஆவினைப் போல் இந்தியாவில் வேறு எந்த நிறுவனமும் இவ்வளவு விலை குறைவாக பால் விநியோகம் செய்யவில்லை எனத் தெரிவித்தார். விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதலை மிக நியாயமான விலையில் ஆவின் நிறுவனம் செய்கிறது எனக் கூறினார்.
இந்திய ஒன்றியத்தில் பாஜக பொறுப்பேற்ற பிறகு இந்திய நாட்டின் கருத்துச் சுதந்திரம் 161வது இடத்திற்கு உலகளவில் சென்றுள்ளதாக தெரிவித்த அவர், இதனை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எங்களது உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளன என்றும், இதனை தொண்டர்களும் மக்களும் விரும்புகிறார்கள், ஆகையால் அவர் எப்போது துணை முதல்வரானாலும் அது மகிழ்ச்சியான விஷயம்தான் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: செங்கோலின் அறம் குறித்து பேச பாஜகவிற்கு என்ன தகுதி உள்ளது? - சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி