விருதுநகர்: விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் விருதுநகரில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சிவகாசியில் தொடர்ந்து பட்டாசு வெடி விபத்து தொடர்வது வருத்தமளிக்கிறது.
மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் சிக்ரியுடன் இணைந்து விபத்தில்லா பட்டாசு தொழிலை உருவாக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது பாஜக ஆட்சியில் அது கைவிடப்பட்டு பட்டாசு விபத்து பற்றி கவலைப்படாத அரசாக மோடி அரசு உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் பட்டாசு விபத்தை தடுத்து தொழிலை மேம்படுத்துவோம்.
4 வது கட்டத்தேர்தல் நடந்து முடிந்த 3 வது கட்டத்தேர்தல் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவத்தின் மூலம் தேர்தல் களம் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக இருக்கிறது. வட இந்தியாவில் இருந்தும் நம்பிக்கையான செய்தி வருகிறது. முஸ்லீம், மட்டன், மங்கல் சூத்ரா ஆகியவற்றை நம்பி மோடி பிரச்சாரம் செய்கிறார்.
ராகுல் காந்தியோ மகாலட்சுமி, வேலைவாய்ப்பு, சாதி கணக்கெடுப்பு, விலைவாசியை மையமாக வைத்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஜீன் 4 ஆம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். பாஜகவில் 70 வயதைக் கடந்து யாரும் ஆட்சி பொறுப்புகளில் இருக்க மாட்டார்கள். ஆனால், மோடி 74 வயதாகியும் ஆட்சியில் இருப்பது மிகப்பெரிய சதியாக தெரிகிறது. ஜூன் 4ஆம் தேதி முதல் மோடிக்கு மக்கள் ஓய்வு கொடுக்க போய்கிறார்கள்
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் கோச்சா, ஏ.பி.ஷா மற்றும் இந்து ராம் ஆகியோர் இணைந்து பொது விவாதம் நடத்த மோடியையும் ராகுல் காந்தியையும் அழைத்ததை வரவேற்கிறோம். ராகுல் காந்தி, விவாதத்தில் பங்கேற்கத் தான் தயார் என்று 2 நாளில் பதிலளித்தார். நரேந்திர மோடி இன்னும் பதில் சொல்லாமல் இருப்பது பல சந்தேகங்களை கிளம்பியுள்ளது.
தமது கட்சியைச் சேர்ந்த நெல்லை மாவட்ட ஜெயக்குமார் கொலை வழக்கு நேர்மையான முறையில் சென்று கொண்டுள்ளது. பொய்களையும் தவறான வரலாறுகளையும் சொல்லித்திரியும் அண்ணாமலை மீது வழக்குத் தொடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், இது காலம் கடந்த நடவடிக்கை. இந்திய அரசியலமைப்பு தெரியாத நடிகையான கங்கனா ரனாவத் போன்றோருக்கெல்லாம் பாஜக சீட் கொடுத்து சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்கிறது” என்று குற்றம்சாட்டினார்.