கன்னியாகுமரி: பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும், கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா இன்று (மார்ச் 3) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று, மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல், கேரளாவில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
பெண்கள் தலையில் இருமுடி கட்டி வந்து, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டுச் செல்வதால், இது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலின் மாசித் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையொட்டி, இன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், அதனைத் தொடர்ந்து பஞ்சாபிஷேகமும், உஷ பூஜையும், தீபாராதனையும் நடந்தது. பின்னர், மூலஸ்தானத்தில் இருந்து கொடி கொண்டு வந்து, மேள தாளத்துடன் கோயிலைச் சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. கொடி வெள்ளை துணியில் சிங்க வாகனம் பொறிக்கப்பட்டு பூமாலை, மணி போன்றவை கட்டப்பட்டு இருந்தது.
தொடர்ந்து கோயிலின் முன்பு உள்ள கொடிமரத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. கொடியை கோயில் தந்திரிகள் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். பின்னர், பக்தர்கள் குடும்பமாக அம்மனுக்கு பொங்கலிட்டு நேர்த்திக் கடனை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் தெலங்கானா ஆளுநரும் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தராஜன், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் முத்துராமன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சம வேலைக்கு சம ஊதியம்; 14வது நாளாக தொடரும் போராட்டத்தில் ஆசிரியர்கள் கைது!