மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை பூர்வீகமாக கொண்டவர் அகமதுஷா வலியுல்லாஹ். வெளிநாட்டில் தொழிலதிபராக உள்ள இவர் மயிலாடுதுறை மாவட்ட திமுக சிறுபான்மை அணி துணை செயலாளராக உள்ளார். குறுகிய காலத்தில் திமுக கட்சியில் முக்கியமானவராக வலம் வந்தார். இவருக்கு செல்போனில் வாட்ஸ் அப் மூலம் கொலை மிரட்டல் விடுத்து ஆடியோ ஒன்று வந்தது.
அந்த ஆடியோவில், மயிலாடுதுறையில் உள்ள அவரது அலுவலகத்தில் கடந்த 17ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்படும் என்றும், தொடர்ந்து அரசியல் செய்தால் ஆம்ஸ்ட்ராங்கை விட மோசமான சம்பவம் நடக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து அகமது ஷாவலியுல்லாஹ் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த ஆடியோவை அனுப்பியது சென்னை தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த சிவபிரசாத் (வயது 20), சாய்பிரவீன் (24) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து கடந்த 18 ஆம் தேதி 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஆடியோவை அனுப்பச்சொன்ன மணிபாரதி என்பவரை போலீசார் வலைபேசி தேடிவந்தனர்.
இந்த நிலையில் மிரட்டல் விடுத்த முக்கிய நபரான கடலூர் மாவட்டம் வசந்தராமபாளையம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் மணிபாரதி (31) என்பவரை சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்ட கணேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மணிபாரதியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தனியார் சர்வே குழுவில் பணியாற்றி வந்த மணிபாரதி, அகமது ஷாவலியுல்லாவுடன் நட்பு ஏற்பட்டு சில உதவிகளை செய்து வந்ததாகவும், சமீபத்தில் மணிபாரதி அகமது ஷாவலியுல்லாஹ்-விடம் பணஉதவி கேட்டபோது, அனைவர் மத்தியில் அவரை திட்டியதாகவும், இதனால் ஆத்திரத்தில் மணிபாரதி, அகமது ஷாவலியுல்லாவுக்கு பாண்டிச்சேரியில் தன்னுடன் பணியாற்றிய ஆந்திராவை சேர்ந்த சிவபிராத், சாய்பிரவீன் மூலம் வாட்ஸ் அப்பில் மிரட்டல் ஆடியோ அனுப்பியதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மணிபாரதியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; அஞ்சலைக்கு ஆகஸ்ட் 8 வரை நீதிமன்றக் காவல்! - Armstrong Murder Case