பெரம்பலூர்: பெரம்பலூர் அடுத்த வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர், குரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன்(44). இதேப் பள்ளியில் பாலமுருகன் என்பவரின் மனைவி தீபா(42) ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இதனிடையே, இவ்விருவருக்கும் நட்பாக பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, பல்வேறு காரணங்கள் கூறி வெங்கடேசன் தீபாவைடம், ரூ.19 லட்சம் பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், கடந்த நவம்பர் 15ஆம் தேதி பணிக்குச் சென்ற இருவரும் வீடு திரும்பவில்லை எனக் கூறி இருவரின் குடும்பத்தினரும் வி.களத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் கோவையில் உள்ள உக்கடம் பகுதியில் கார் ஒன்று கேட்பாரின்றி நின்று கொண்டிருப்பதாக கோவை பெரிய கடை வீதி போலிசாருக்கு தகவல் வந்தது. இந்த தகவலின் பேரில், அங்கு சென்ற போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த கார் பெரம்பலூர் காணாமல்போன, அரசு பள்ளி ஆசிரியை தீபாவின் கார் என்பது தெரியவந்தது.
அப்போது அந்த காரில் ரத்தக்கறை படிந்த சுத்தியல், உடை, ஒரு கத்தி, ஏடிம் கார்டு, தாலி உள்ளிட்டவை இருந்துள்ளது. பின்னர், தடயவியல் நிபுணர்கள் மூலம் ஆதாரங்கள் சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், காணாமல்போன அரசு பள்ளி ஆசிரியர்கள் இருவரையும் போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசித் தேடிவந்தனர்.
இதற்கிடையில், வெங்கடேசனின் மனைவி உட்பட உறவினர் மூவரை காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து இருவரை குறித்த எந்த தகவலும் இல்லாத நிலையில், தேடப்பட்டு வந்த அரசு பள்ளி ஆசிரியர் சென்னையில் பதுங்கி இருப்பதாக பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அத்தகவலின் அடிப்படையில் சென்னை விரைந்த போலீசார், பிப்.8ஆம் தேதி அவரை கைது செய்தனர். பின்னர், போலீசார் வெங்கடேசனை பெரம்பலூர் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது தன்னுடன் பணியாற்றிய சக ஆசிரியை தீபாவை, பெரம்பலூர் அருகே உள்ள முருக்கன்குடி வனப்பகுதியில் வைத்து கொலை செய்து, உடலை புதுக்கோட்டை அருகே பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து வெங்கடேசன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், வெங்கடேசனை வேப்பந்தட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது இம்மாதம் 23ஆம் தேதி வரை வெங்கடேசனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பின்னர் வெங்கடேசனை சிறையில் அடைப்பதற்காக போலீஸார் அழைத்துச்சென்றனர்.
இதையும் படிங்க: பாயாசத்தில் விஷம் வைத்து சிறுமி கொலை; ஆயுள் தண்டனை வழங்கிய தேனி மாவட்ட நீதிமன்றம்!