ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூரைச் சேர்ந்தவர் பழனிசாமி என்பவரின் மனைவி பாப்பக்காள் (65). சில ஆண்டுகளுக்கு முன்னர் பாப்பக்காளின் கணவர் பழனிச்சாமி இறந்து விட்தை அடுத்து, அவரது மகன் தேவராஜ் கூலி வேலை செய்து தாயைக் காப்பாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், தேவராஜின் உறவினர்கள் மற்றும் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் ரயில் மூலமாக காசி யாத்திரை சென்றுள்ளனர். இந்நிலையில், இன்று (புதன்கிழமை) காலை தேவராஜ் உட்பட அனைவரும் ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தபோது, தேவராஜுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து, அவரது உறவினர்கள் அவரை அருகில் இருந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தேவராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.
அதனை அடுத்து, தேவராஜ் மரணமடைந்தது குறித்து அவரது தாயாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், தனது மகனின் சடலத்தை வீட்டிற்கு கொண்டு வர முயன்றுள்ளார். அதற்காக தனியார் ஆம்புலன்ஸ் ஒரு லட்சம் ரூபாய் வரை வாடகை கேட்டதால் செய்வறியாது இருந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, தனது மகனின் சடலத்தை தமிழகம் கொண்டு வர அரசின் உதவியைக் கேட்டு, கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். இதையடுத்து, ஒடிசாவில் இருந்து உயிரிழந்த தேவராஜின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்.. இரண்டு பேருந்துகளுக்கு இடையில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு!