திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், பி.கஸ்பா, கே.எம். சாமி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 45). கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்துவந்த இவருக்கு கவியரசி என்ற மனைவியும், இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர் ஆண்டுதோறும், திருத்தணி முருகன் கோயிலுக்கு காவடி எடுத்துச் செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் காவடி எடுத்து செல்ல நேற்று குடும்பத்துடன் திருத்தணிக்கு புறப்பட்டுள்ளார்.
அப்போது கோயிலுக்கு செல்லும் வழியிலேயே மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தெரியாமல் வாலாஜா பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். மீண்டும் ஆம்பூருக்கு வந்த அவர், ஆம்பூர் ரயில் நிலையம் அருகில் நடராஜபுரம் பகுதியில் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர், அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா?, குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறேதும் பிரச்சனைகள் அவருக்கு இருந்ததா என்பன உள்ளிட்ட பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருத்தணிக்கு காவடி எடுத்துச்சென்ற பக்தர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: வாட்டர் டேங்க் மீது பெண் தோழியுடன் வீடியோ கால்.. தவறி விழுந்த சிறுவன் பலி.. சென்னையில் நடந்தது என்ன? - chennai school boy death