சென்னை: கிண்டி ரயில் நிலைய நடைமேடை ஒன்றில், ஒருவர் பெண்ணிடம் வெகுநேரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். பின்னர், திடீரென அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண்ணை கழுத்தில் குத்தியுள்ளார். இதனையடுத்து, அந்த பெண் அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடி உள்ளார். அப்போதும், அந்த நபர் பெண்ணை விடாமல் துரத்திச் சென்று கத்தியால் குத்தியுள்ளார்.
இதனைக் கண்ட பொதுமக்கள், அருகில் உள்ள நடைமேடையில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற ரயில்வே போலீசார், ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த அந்தப் பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்த அந்த நபரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் சென்னை பாரிமுனையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பதும், கத்தியால் குத்தியதில் காயமடைந்த பெண் அவரது மனைவி பானுமதி என்பதும் தெரிய வந்துள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது மனைவியை கழுத்து, கை, வயிறு ஆகிய பகுதிகளில் குத்தியதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மாம்பலம் ரயில்வே போலீசார், வெங்கடேசனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடைபெறும்போது அந்த நடைமேடையில் போலீசார் யாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: திமுக பிரமுகர் கொலை வழக்கு; கூலிப்படை ஏவி கொலை செய்த பெண் ஊராட்சி மன்ற தலைவி கைது