சேலம்: "ஏலியன்களிடம் நான் பேசி அனுமதி வாங்கி கோயில் கட்டியிருக்கிறேன்" என்கிறார் சேலம் மல்லமூப்பம்பட்டியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர். இவர் கட்டி வரும் கோயில் தான் இப்பகுதியில் பேசு பொருளாக உள்ளது. சுமார் முக்கால் ஏக்கர் நிலத்தில் இவர் அமைத்துள்ள கோயிலில், சிவன், பார்வதி, முருகன், காளி போன்ற தெய்வங்களுக்கு சிலை இருப்பது போன்று ஏலியன்களுக்கும் பூமிக்கு கீழ் 11 அடி ஆழத்தில் பாதாள அறையில் சிலை அமைத்துள்ளார்.
வினோதமான இந்த வழிபாடு குறித்து அவரிடம் பேசிய போது, உலகிலேயே ஏலியன்களுக்கு கட்டப்பட்டுள்ள முதல் கோயில் இதுதான் என தான் நம்புவதாகக் கூறினார். ஏலியன்களிடம் தான் பேசி உரையாடியிருப்பதாகவும், அவர்கள் அளித்த அனுமதியின் பேரில் இந்த கோயிலை கட்டியிருப்பதாகவும் கூறினார்.
ஈடிவி பாரத் செய்தியாளரிடம் தொலைபேசியில் அவர் உரையாடிய போது, உலகில் இயற்கைச் சீற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், இவற்றை தடுக்கும் சக்தி ஏலியன்களிடம் தான் உள்ளது என தான் நம்புவதாக குறிப்பிட்டார். தனது நம்பிக்கையின் படி, ஏலியன்கள் சினிமாவில் வருவது போல இருக்க மாட்டார்கள், கொம்புகள் எல்லாம் அவர்களுக்கு இருக்காது என கூறியதோடு, ஏலியன்களை எப்படி வழிபட வேண்டும் என தனியாக வழி காட்டு நெறிமுறைகளையும் கூறி அசர வைத்தார். வாழை இலையை உடலைச் சுற்றி கட்டிக் கொண்டால், ஏலியன்களிடமிருந்து வரும் கதிர்வீச்சிலிருந்து தப்பிக்கலாம் என்பது அணு விஞ்ஞானிகளையே அதிசயிக்க வைக்கும் யோசனையாக இருந்தது.
லோகநாதன் கட்டி வரும் கோயிலின் கட்டுமான வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், ஏலியன் சிலைகள் குறித்த தகவல் பரவியதால் ஏராளமான பொதுமக்கள் தினமும் வந்து பார்த்து செல்கின்றனர். கோயில் திறக்கப்படும் முன்னரே வித்தியாசமான செயல்பாட்டால் கவனம் ஈர்த்துள்ளார் லோகநாதன்.
இதையும் படிங்க: ஏலியன்கள் இருக்கிறார்களா? இல்லையா?அறிவியல் சொல்வது என்ன?