தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே நரியங்காடு கிராமத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாதி எரிந்த நிலையில் 30 வயது உடைய வாலிபர் உடல் கிடந்தது. இது குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, வாலிபர் பிணமாக கிடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் ஒரு சாக்கு முட்டையில் ரத்தக்கரை படிந்த பெட்ஷீட், சிவப்பு நிற டி-ஷர்ட், நீல நிற கைலி உள்ளிட்ட பொருட்கள் கிடந்தன.
இதை தடய அறிவியல் நிபுணர்கள் கைப்பற்றி ஆய்வு செய்தனர். பின்னர் பிணமாக கிடந்த வாலிபர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பட்டுக்கோட்டையை சேர்ந்த ஆறுமுகம் (30) என்பது தெரிய வந்தது.
மேலும், ஆறுமுகம் அடித்து கொலை செய்யப்பட்டு அவரது உடல் எரிக்கப்பட்டதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில், இந்த கொலை வழக்கில் கடந்த 5 ஆண்டுகளாக துப்பு கிடைக்காததால் குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன், ஏட்டு புகழேந்தி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா (42) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த , ராஜா, பட்டுக்கோட்டையை சேர்ந்த மதியழகன் என்பவரது பட்டியில் இருந்த 100 ஆடுகளை ஆறுமுகத்துடன் சேர்ந்து திருடியுள்ளார்.
ஆடுகளை திருடி செல்லும் போது மதியழகன் ஆட்களை காவலுக்கு நிறுத்தி இருந்தார். இதனால் ஆடுகளை வெளியில் கொண்டு செல்ல முடியாமல் போனது. ஆடுகளை திருடியதை மதியழகனிடம் ஆறுமுகம் கூறி விடுவார் என்ற பயத்தால் ராஜா ஆறுமுகத்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி ஆறுமுகத்தை அழைத்து சென்று மது குடிக்க வைத்து இரும்பு கம்பியால் ஆறுமுகத்தின் தலையில் அடித்து கொன்றுவிட்டு, பின்னர் அவரின் உடலை சம்பவ இடத்தில் எரித்ததாக போலீசிடம் ராஜா தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ராஜாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
5 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபரை உடலை எரித்து கொன்ற தொழிலாளியை கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் எஸ்பி ஆஷிஷ் ராவத் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.
இதையும் படிங்க: மலக்கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம்..மறந்து போன மனிதநேயம்!