தூத்துக்குடி: ஸ்மார்ட் போன், இன்டர்நெட் பயன்பாடு எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளதோ அந்த அளவுக்கு சைபர் க்ரைம் மோசடிகளும் பெருகியுள்ளன. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் மூலமாக பண மோசடியில் ஏமாற்றப்படுபவர்களின் எண்ணிக்கை அண்மை காலமாக அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், முகநூலில் வெளிநாட்டைச் சேர்ந்தவராக காட்டிக்கொண்டு பழகும் பலர் கிப்ட் அனுப்பவதாக கூறி பண மோசடியில் ஈடுபடும் தந்திரத்தை கையாள்கிறார்கள். அந்த வரிசையில் தூத்துக்குடியை சேர்ந்த பெண் ஒருவர் 38 லட்சம் ரூபாயை இழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் பகுதியைச் சேர்ந்த அந்த பெண் பேஸ்புக்கில் Nicholas Andrewis Morris என்ற பெயருடைய அடையாளம் தெரியாத மர்ம நபருடன் அறிமுகமாகி இருவரும் சேட்டிங் செய்து வந்துள்ளனர். நாளடைவில் இருவரும் நன்றாக பழகவும் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், அந்த நபர் தூத்துக்குடி பெண்ணுக்கு கிப்ட் பார்சல் அனுப்புவதாக கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து, ஒருநாள் சுங்கத்துறை அலுவலகத்திலிருந்து பேசுவதாக கூறி அந்த பெண்ணுக்கு அழைப்பு வந்துள்ளது. அதில், '' உங்களுக்கு 70,000- Pounds பணம், நகை மற்றும் ஐ போன் ஆகியவை பார்சலில் வந்துள்ளதாகவும், அந்தப் பார்சலை பெறுவதற்கு பிராசசிங் கட்டணம், டெலிவரி கட்டணம், ஜிஎஸ்டி, கஸ்டம்ஸ் உள்ளிடவைகளுக்கு பணம் கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண் பல்வேறு தவணைகளில் 38,19,300 ரூபாய் வரை ஆன்லைனில் அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த அந்த பெண் இதுகுறித்து தேசிய சைபர் குற்றப்பிரிவில் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார். புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் மோசடியில் ஈடுபட்ட நபரை குறித்து விசாரித்து வந்தனர்.
அதில், வேலூர் மாவட்டம் அரக்கோணம் அக்கச்சிகுப்பம் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் முத்து (32) என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் நேற்று (27.06.2024) சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் வைத்து முத்துவை கைது செய்து தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர். இன்று அவரை தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையிலடைத்தனர். மேலும், இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சொகுசு காரில் கட்டுக் கட்டாக சிக்கிய ரூ.1 கோடி.. பின்னணி என்ன?