திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் எண்கண் தெற்கு வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (78). ஒய்வு பெற்ற சிறைத்துறை காவலரான இவர் நேற்று முன்தினம் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் சென்டரில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நபரிடம் தனக்கு பணம் எடுக்க உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். அதன்படி அந்த நபர் அவரது ஏடிஎம் கார்டையும் பின் நம்பரையும் கேட்டுவிட்டு அவர் எடுக்க சொன்ன ரூ.2 ஆயிரம் பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு அவருக்கு தெரியாமல் அவரது கார்டுக்கு பதிலாக வேறொரு ஏடிஎம் கார்டினை கொடுத்துவிட்டு மாயமானார்.
பின்பு சில மணி நேரங்கள் கழித்து அவரது செல்போனுக்கு ஏடிஎம்மில் இருந்து ரூ 9 ஆயிரத்து 500 பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்ததுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியன் தனது ஏடிஎம் கார்டு மூலம் மோசடி செய்த நபர் குறித்து திருவாரூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் நகர காவல் துறையினர் உடனடியாக தீவிர விசாரணை நடத்தினர். மேலும், ஏடிஎம் எந்திரம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவு செய்த காட்சி கொண்டு மோசடி செய்த நபரை தேடினர். இதில் அடையாளம் காணப்பட்ட அந்த நபர் கொடைக்கானல் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த அல்போன்ஸ் (42) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அல்போன்சை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன.
அல்போன்ஸ் முன்னதாக தஞ்சாவூர் பகுதியில் ஒரு மூதாட்டியை ஏமாற்றி ஏடிஎம் மூலம் பணம் எடுத்துவிட்டு திருவாரூர் வருகை தந்ததாகவும், இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏடிஎம் திருட்டில் ஈடுபட்டு உள்ளதாகவும் காவல்துறையினரிடம் வாக்கு மூலம் அளித்தார்.
அதுமட்டுமின்றி அல்போன்ஸ் மீது தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இந்த நிலையில் அல்போன்ஸை திருவாரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் நாகை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சாதி மறுப்பு திருமணம் - நெல்லை கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறையாடல்