தருமபுரி: தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த மடதள்ளி கிராமத்தைச் சேர்ந்த அதியமான் என்பவர், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்களின் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகளின் உறவினர்களோடு நன்றாக பேசி அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்து கொடுத்து தனக்கு மருத்துவத் துறை அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் தெரியும் அவர்களின் மூலமாக அரசு வேலைகள் வாங்கித் தர முடியும் என ஆசை வார்த்தை கூறி பலரை ஏமாற்றி வந்துள்ளார்.
பெண்களுடன் பழக்கம்: இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாப்பாரப்பட்டி அடுத்த ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சமதர்மன் என்பவரின் மனைவி அகிலா, தமது தந்தையின் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்தபோது, அவருக்கு அதியமான் மருத்துவமனையில் சிறு சிறு உதவிகளை செய்து கொடுத்துள்ளார். அப்போது, போன் நம்பரை வாங்கிக் கொண்டு அடிக்கடி பேசியதில், இருவருக்குள் பழக்கமாகி உள்ளது. இதில் அதியமான், சமதர்மன் மனைவி அகிலாவுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
ராணுவ வீரர் மனைவிக்கு வலை: இதில், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி, வெளியூர் சென்றும் வந்துள்ளனர். இந்நிலையில், அதியமான் அரசு வேலை வாங்கி தருவதாக, அகிலாவிடம் 7 லட்சம் பணம் பெற்றுள்ளார். மேலும், அகிலா உறவினர் ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் உதவியாளர் பணிக்கு ஆள் தேவைப்படுவதாகவும் கூறி, 4 லட்சம் பணம் பெற்றுள்ளார். மேலும், 4 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அலுவலக உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணையை போலியாக தயாரித்து வழங்கியுள்ளார்.
தனி வீடு: இதனை தொடர்ந்து பணி நியமன ஆணை போலி என தெரிய வந்ததும் கணவனுடன் அகிலாவுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறை அடுத்து அகிலா தனது பிள்ளைளுடன் அதியமானுடன் சென்றுள்ளார். பின்னர் அதியமான், அகிலா மற்றும் குழந்தைகளை அழைத்து சென்று திருப்பூரில், வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்துள்ளனர்.
இந்த நிலையில், மனைவி மற்றும் குழந்தைகளை அதியமான் கடத்திச் சென்றதாக ராணுவ வீரர் சமதர்மன் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அதியமான் ராணுவ வீரரின் மனைவி மற்றும் குழந்தைகளை திருப்பூரில் வைத்திருந்தது தெரிய வந்தது.
ஆசை வார்த்தை: திருப்பூர் சென்ற பாப்பாரப்பட்டி காவல் துறையினர் அதியமான், அகிலா மற்றும் குழந்தைகளை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அதியமான் அரசு மருத்துவமனைக்கு வரும் பெண்களிடம் மருத்துவ உதவி செய்வதாக ஆசை வார்த்தை கூறி, செல்போன் நம்பரை கொடுத்து அடிக்கடி பேசுவதும், மருத்துவமனைக்கு விபத்தில் காயமடைந்து ஆபத்தான சூழலில் வரும் பொதுமக்களிடம், இந்த மருத்துவமனையில் இருந்தால் உயிர் பிழைக்க முடியாது. சேலம் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள் என கூறி, தனியார் மருத்துவமனையில் கமிஷன் வாங்கியதும் தெரிய வந்தது.
மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவியாளர் பணிக்கு பணி நியமன ஆணையை போலியாக தயாரித்துக் கொடுத்ததும் தெரிய வந்தது. அதேபோல் பல பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் பணம் ஏமாற்றியதும் விசாரணையில் அம்பலமானது. இதனை அடுத்து அதியமானை பாப்பாரப்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரியும் அதியமான் ஏற்கெனவே இரண்டு திருமணமான நிலையில், ராணுவ வீரரின் மனைவியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியது, அரசு வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் பண மோசடி செய்து போலியாக பணி நியமன ஆணை தயாரித்து கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.