தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சாலைப்புதூர் சுங்கச்சாவடி அருகே கரிசல் குளம் காட்டுப் பகுதியில், கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி அடையாளம் காண முடியாத படி எரிக்கப்பட்டு அழுகிய நிலையில் ஒரு மூதாட்டியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உடல் அருகே தீயிட்டு எரிக்கப்பட்ட பெண்ணின் உடைகள் துண்டு துண்டாக கிடந்தது.
இது தொடர்பாக கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், இறந்து கிடந்தது சாத்தூர் படந்தால் பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவரின் மனைவி காந்திமதி (71) என்பது தெரிய வந்தது. முன்னதாக மூதாட்டி காந்திமதியைக் காணவில்லை என அவரது மகன் போலீசில் புகார் அளித்திருந்துள்ளார்.
அதன்படி, அவரிடம் கயத்தாறு காட்டுப் பகுதியில் எரிக்கப்பட்ட பெண்ணின் உடல் அருகே கண்டெடுக்கப்பட்ட துண்டு துணிகளை காட்டிய பொழுது அது அவரது தாயார் காந்திமதியின் உடைகள் தான் என அடையாளம் காட்டினார். கோவில்பட்டி துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் வழிகாட்டுதலின்படி, கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், காணாமல் போன காந்திமதி, சம்பவத்தன்று சாத்தூர் படந்தால் பகுதியைச் சேர்ந்த வேல்பாண்டி மகன் சண்முகபாண்டி (35) என்பவருடன் காரில் சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் சண்முகபாண்டியைப் பிடித்து தீவிரமாக விசாரணை செய்ததில், அவர் காந்திமதியைக் கொன்று கயத்தாறு காட்டுப் பகுதியில் எரித்தது தெரிய வந்தது. கொலை செய்யப்பட்ட காந்திமதி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார்.
சண்முகபாண்டி 1.50 லட்சம் ரூபாயை காந்திமதியிடம் கொடுத்து, வட்டிக்கு விடும்படி கூறியுள்ளார். சில மாதங்கள் வட்டியை சரியாக கொடுத்த காந்திமதி, அதன்பிறகு கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் சண்முகபாண்டி தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பொழுது காந்திமதி கொடுக்காமல் தட்டிக் கழித்ததுடன், கொடுக்க முடியாது உன்னால் முடிந்ததை செய் என சவால் விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவத்தன்று சண்முகபாண்டி தனது நண்பரின் காரை எடுத்துக் கொண்டு காந்திமதியைச் சந்தித்து இது பற்றி பேசி உள்ளார். பின்பு உங்களை வீட்டில் விட்டு விடுகிறேன் எனக்கூறி காரில் ஏற்றி உள்ளார். இதை நம்பி காரில் ஏறிய காந்திமதியை வழியிலேயே இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் காந்திமதி மயக்கம் அடையவே, சண்முகபாண்டி நேராக கயத்தாறு அருகே உள்ள சாலைப்புதூர் சுங்கச்சாவடி அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று, அங்கு வைத்து மீண்டும் கடுமையாக தாக்கியதில் காந்திமதி உயிரிழந்துள்ளார். உடனே தான் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை மூதாட்டி மீது ஊற்றி தீயிட்டு எரித்துவிட்டு அங்கிருந்து காருடன் தப்பிச் சென்றதாக தனது வாக்குமூலத்தில் கூறினார். இதனை அடுத்து சண்முகபாண்டியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: நெல்லையில் இரட்டை கொலை: கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெறிச்செயல்! - Tirunelveli double murder