சென்னை: கோயம்புத்தூரிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த மலேசியா, பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் ராமசாமி, செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. 1993 ஆம் ஆண்டு நான் பார்த்த தமிழ்நாட்டை விட பல மடங்கு வளர்ச்சியை தற்போது அடைந்துள்ளது. குறிப்பாகச் சாலை உள்ளிட்ட வசதியில் மேம்பாட்டு அடைந்துள்ளது. மலேசியாவில் பினாங்கு மாநில ஆளும் கட்சியில் இருந்தபோது துணை முதல்வராக 15 ஆண்டுகளாக இருந்தேன்.
அந்த கட்சியில் இருந்து விலகி 'யுனைடெட் ரைட் மலேசியா பார்ட்டி' (United Right Malaysian Party) என்ற தனி கட்சி தொடங்கி உள்ளேன். ஆனால் கட்சிக்கு இன்னும் அங்கீகாரம் தரவில்லை. அங்கீகாரம் பெற முயற்சித்து வருகிறோம்.
மலேசியாவில் வசிக்கும் இந்தியர்களில் 85 சதவீதம் தமிழர்கள். அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். பினாங்கு மாநிலத்தில் 2 தொகுதி இடைத்தேர்தலில் எங்கள் கட்சிக்கு உரிய அங்கீகாரத்தை மக்கள் எங்களுக்கு கொடுத்துள்ளனர்.
தற்போது எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். வருங்காலத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். மலேசியாவில் உள்ள இந்தியர்களுக்கு குரல் கொடுக்ககூடிய கட்சி இல்லை. அதன் காரணமாகவே தனிக் கட்சியைத் தொடங்கி உள்ளோம்.
மலேசியாவில் 2 அமைச்சர்கள் இந்தியர்களாக இருப்பார்கள். ஆனால் தற்போது ஒரு தமிழர் கூட அங்கு அமைச்சராக இல்லை. 4 தலைமுறையாக மலேசிய நாட்டிற்காகப் பாடுபட்டு உள்ளோம்.
'மத்திய அரசின் பட்ஜெட் பாரபட்சமான பட்ஜெட்' என்று ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். அதுபோலப் பழிவாங்கக் கூடிய பட்ஜெட்டாகதான் உள்ளது. எந்தெந்த மாநில கட்சி ஆதரவு தந்தோ, அந்த பெயர்களை மட்டும் பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், தமிழ்நாடு என்ற பெயரைச் சொல்லவில்லை. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவைக் குற்றம் சொல்லி இருக்கிறார்.
மத்திய அரசாங்கம் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் மக்களுக்காக செயல்பட வேண்டும். உலகம் முழுவதும் சிறுபான்மையின மக்கள் ஒதுக்கப்படுகின்றனர். மலேசியாவில் இதை ஏற்காமல் தான் தனிக் கட்சியை ஆரம்பித்துப் போராட உள்ளோம்" என்று பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் ராமசாமி கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் கொலை.. தென் மாவட்டங்களில் தொடரும் படுகொலைகள்!