சென்னை: சென்னைக்கு வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாகச் சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்க அதிகாரிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மலேசியாவிலிருந்து நேற்று நள்ளிரவில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளைச் சுங்க அதிகாரிகள் நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் மலேசியா ஆண் பயணி ஒருவரைக் கண்ட சுங்கத்துறையினர் அவரிடம் சோதனை நடத்தியதில், அவர் மறைத்து வைத்திருந்த தங்கச் சங்கிலிகள் மற்றும் வளையல்களை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட மொத்த தங்கத்தின் எடை 710 கிராம் இருக்கும் எனவும் அதன் சர்வதேச மதிப்பு 44லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் இருக்கும் எனத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
மற்றொரு சம்பவம்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து இன்று மற்றொரு தனியார் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இதில் வந்த பயணிகளைச் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தியபோது மலேசியா நாட்டைச் சேர்ந்த சுமார் 35 வயது பெண் பயணி ஒருவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் அவரது உடைமைகளைச் சோதனை செய்தனர்.
அப்போது அவரது உடைமைகளுக்குள் 900 கிராம் தங்கச் சங்கிலிகள் மறைத்து வைத்திருப்பதைச் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.இதனைப் பறிமுதல் செய்து பெண் பயணியைக் கைது செய்துள்ள நிலையில், அந்த தங்கத்தின் சர்வதேச மதிப்பு 56 லட்சத்து 38 ஆயிரம் இருக்கும் எனத் தெரியவந்துள்ளது.
மேலும் இதைப்போல் அபுதாபியிலிருந்து ஏர் அரேபியா பயணிகள் விமானம் ஒன்று இன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளைச் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது பயணி ஒருவர் சுங்க சோதனை தீவிரமாக நடப்பதை அறிந்து, அவர் கடத்திக் கொண்டு வந்த ஒரு கிலோ மற்றும் 56 கிராம் எடையுடைய தங்கப் பசை அடங்கிய 4 பொட்டலங்களை விமான நிலைய சுங்கச் சோதனை பகுதியில் விட்டுவிட்டு, தப்பி ஓடித் தலைமறைவாகிவிட்டார். அந்த தங்கத்தின் மதிப்பு சுமார் 66 லட்சத்து 23ஆயிரம் ரூபாய் இருக்கும் எனத் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து தங்கத்தைப் பறிமுதல் செய்து, தப்பி ஓடிய நபரைப் பிடிப்பதற்காகத் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர் சுங்க அதிகாரிகள். இவ்வாறு ஒரே நாள் இரவில் சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 1 கோடியே 67லட்சம் மதிப்புடைய 2 கிலோ 66கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழகத்தில் பூரண மது விலக்கு சாத்தியமில்லை - அண்ணாமலை சொல்லும் மாற்று யோசனை!