மதுரை: கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியான நீட் தேர்வு முடிவுகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ள நிலையில் மக்கள் கல்விக் கூட்டியக்கம் மத்திய அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவித்து, பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "நீட் தேர்வு முறைகேடுகளால் மாணவர்களின் உயர்கல்வியை கேள்விக்குறியாக்கி உள்ள மத்திய அரசையும், தேசிய மருத்துவ ஆணையத்தையும் மக்கள் கல்விக் கூட்டியக்கம் கண்டிக்கிறது.
தொடர்ந்து முறைகேடுகளால் நிரம்பி வழியும் என்டிஏ எனும் தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும். முறைகேடுகளில் ஈடுபட்ட என்டிஏ அதிகாரிகள் அனைவரும் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி நீட் தேர்வு முறையை முற்றிலும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இக்கல்வி ஆண்டு முதல் ஏற்கனவே இருந்தது போல் +2 தேர்ச்சி மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். இக்கல்வி ஆண்டில் 4,750 மையங்களில், 23 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதற்கான தேர்ச்சிப் பட்டியல் ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த தேர்ச்சி பட்டியலைப் பார்த்த மாணவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். முதல் 100 இடங்களில் 67 பேர் முழு மதிப்பெண்கள் (720 மதிப்பெண்கள்) பெற்றுள்ளனர் என்பது அதிர்ச்சியாக உள்ளது. அடுத்து 719, 718 என மதிப்பெண்களை பல மாணவர்கள் பெற்றுள்ளனர். இயல்பாக இவ்வாறு நடக்க வாய்ப்பு இல்லை. இது என்டிஏவின் மீது பெரும் சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
நீட் தேர்வைப் பொருத்தவரை ஒரு சரியான விடைக்கு 5 மதிப்பெண்களும், தவறான விடை எழுதினால் ஒரு நெகட்டிவ் மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. அதாவது, ஒரு தவறான விடைக்கு 6 மதிப்பெண்கள் கழிக்கப்படும். அப்படி பார்த்தால் தேர்வு முடிவில் இரண்டாம் மதிப்பெண் என்பது 714 ஆகத்தான் இருக்க முடியும். ஆனால் தற்போது முதல் மதிப்பெண்ணுக்கு அடுத்து 719, 718 என பல மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளன. இது மிகப்பெரிய அளவில் முறைகேடு நடத்திருப்பதற்கான ஆதாரமாக உள்ளது.
தேர்வு நேரத்தில் ஏதேனும் காரணமாக அல்லது எதிர்பாராமல் சில நிமிடங்கள் நேரம் விரயமானால், அதற்கு ஈடாக கருணை மதிப்பெண் வழங்கலாம் என கூறியுள்ளதன் படி உச்சநீதிமன்றம் ஏற்கனவே கருணை மதிப்பெண்கள் வழங்கியதே இதற்கு காரணம் என மத்திய கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி சொல்லும் விளக்கம் நம்பும்படியாக இல்லை.
ஏனெனில், நடந்து முடிந்த நீட் தேர்வில் நேரம் விரயம் ஆனது என்றோ, அதனால் மாணவர்கள் இவ்வளவு பேர் பாதிக்கப்பட்டனர் என்றோ அவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றோ தேர்வு முடிந்த பின்பு என்டிஏ எந்தவித முன்னறிவிப்பும் செய்யவில்லை.
இதுமட்டுமல்ல, தற்போது வரை யாருக்கெல்லாம் என்ன காரணத்திற்காக எவ்வளவு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன என்பதற்கான ஆதாரத்தையும் என்டிஏ வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதற்கு மாறாக ரகசியமாக குஜராத், உ.பி, ராஜஸ்தான், அரியானா, பீகார் உள்ளிட்ட 6 மாநிலங்களைச் சார்ந்த 1500 மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண்களை வழங்கி உள்ளது தேசிய தேர்வு முகமை.
அரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வெழுதிய, அடுத்தடுத்த வரிசை எண்களைக் கொண்ட சுமார் 8 மாணவர்கள் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட பயிற்சி நிறுவனத்தில் படித்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது என்டிஏவுடன் கார்ப்பரேட் நீட் பயிற்சி நிறுவனங்கள், கூட்டு சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதற்கான முகாந்திரம் இருப்பதைக் தெளிவாக காட்டுகிறது. கடந்த மே 5ஆம் தேதி நீட் தேர்வு நடந்த போது, வினாத்தாள்கள் கசிந்ததாகவும், ஆள்மாறாட்டம் நடந்ததாகவும் புகார்கள் எழுத்தன. அது குறித்து உடனடியாக எந்த வித விசாரணையும் நடத்தாமல் என்டிஏவும், மத்திய கல்வி அமைச்சகமும் வினாத்தாள் கசியவில்லை என மறுத்தன. ஆனால், வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் தொடர்பாக பீகாரில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், தற்போது வெளிவந்துள்ள நீட் தேர்ச்சிப் பட்டியல் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடத்திருப்பதை அம்பலப்படுத்திவிட்டது. மேலும் போட்டித் தேர்வுகள் நடத்துவது ஊழலைத் தடுக்கும் என்பது தவறான புரிதல் என்பதையும் இந்த ஊழல் வெளிப்படுத்தியுள்ளது. இப்போது அவசர அவசரமாக என்டிஏ நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
குற்றவாளியான என்டிஏ எப்படி விசாரணைக் குழுவை அமைக்க முடியும், இந்த விசாரணைக்குழு எப்படி நியாயமாக, நடுநிலையாக, நேர்மையாக விசாரணையை மேற்கொள்ள முடியும். என்.டி.ஏ அமைத்த நான்கு பேர் குழு விசாரணை நடத்தினால் உண்மைகளை வெளிக்கொண்டு வர முடியாது. எனவே, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தனியார் திருமண மண்டபம் மீதான விதிமீறல் வழக்கு: மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - chennai high court madurai bench