சென்னை: கடந்த மாதம் ஆகஸ்ட் 28ஆம் தேதி பரம்பொருள் பவுண்டேஷன் சார்பாக அசோக் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு சொற்பொழிவாற்றினார். அப்பொழுது மாணவ மாணவிகளிடம் மூடநம்பிக்கை தனமாக பேசியதாகவும், மாற்றுத்திறனாளிகள் பற்றி அவதூறான வார்த்தைகளை குறிப்பிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக மகாவிஷ்ணு மீது மாற்றுத் திறனாளிகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய வேண்டும் என ஏற்கனவே சைதாப்பேட்டை, திருவெற்றியூர் ஆகிய காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விமான நிலையத்தில் விளக்கம் தருவதாக மகா விஷ்ணு தெரிவித்திருந்தார். இதற்காக விமான நிலையத்தில் ஊடகத்தினர் காத்திருந்தனர். அப்போது காவல்துறையினர் வழக்கத்திற்கு மாறாக குவிந்திருந்தனர்.
மேலும் பயணிகள் வழக்கமாக வரும் வழியில் மகா விஷ்ணுவை அழைத்து வராமல், ஊடகத்தினர் சந்திக்காத வகையில் காவல்துறையினர் அவரை கைது செய்து வேறு வழியில் அழைத்து சென்றனர். விமான நிலையத்தில் இருந்து மகா விஷ்ணுவை அழைத்துச் சென்ற போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியானது.
ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்கு: இந்நிலையில், மகா விஷ்ணு மீது BNS சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளிலும் IPC -இன் 2016 act 92 பிரிவு என மொத்தம் 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சட்டப்பிரிவு 192 -கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது, 196 (1) (a) - சமூகத்தில் வெறுப்பான தகவல்களை பரப்புவது, 352 - பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசுவது, 353 (2) -மதம் இனம் குறித்து தவறான தகவல்களை பரப்புவது,மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டங்களின் கீழாக 92 (a) பிரிவின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான குற்றம் செய்வது ஆகிய பிரிவுகளின்கீழ் மகாலிஷ்ணு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, எழும்பூர் நீதிமன்ற நீதிபதி குடியிருப்பில் நீதிபதி முன்பு மகா விஷ்ணு இன்று மாலை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, வருகின்ற 20 ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மகாவிஷ்ணுவை போலீசார் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
'தகவல் தெரிவிக்கவில்லை': இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவின் வழக்கறிஞர் பாலமுருகன், "மாற்றுத்திறனாளி சங்கத்தை சேர்ந்த விஜயராஜ் என்பவர் மகாவிஷ்ணு மீது புகார் கொடுத்திருந்தார். மாற்றுத்திறனாளிகள் சிறப்பு சட்டத்தின் கீழ் மகாவிஷ்ணுவை கைது செய்துள்ளார்கள்.
சென்னை விமான நிலையத்தில் காவல் உதவி ஆணையர் தலைமையில் மகாவிஷ்ணுவை கைது செய்தனர். மேலும் கைது செய்த தகவலை அவரது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் காவல்துறையினர் தெரிவிக்கவில்லை. அவரை கைது செய்த தகவலை காவல்துறையினர் அவரது வீட்டுக்கும் சொல்லவில்லை. ஒருவரை கைது செய்யும் முன்பு அவரது உறவினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதை காவல்துறை செய்யவில்லை.
நாங்கள் காலையிலிருந்து மாலை வரை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் காத்திருந்தோம். சைதாப்பேட்டையில் இருந்து நாங்கள் வருவதற்கு முன்பு மகாவிஷ்ணுவை ரிமாண்ட் செய்துவிட்டார்கள். திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை வரும். அதை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம்" என்று வழக்குரைஞர் பாலமுருகன் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: அசோக் நகர் அரசுப் பள்ளி சொற்பொழிவு சர்ச்சை: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்!