மதுரை: மதுரை வலையங்குளம் பகுதியில் 41ஆவது வணிகர் தினத்தை முன்னிட்டு, 'வணிகர் விடுதலை முழக்கம் மாநாடு' நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் சில முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு:-
- இரட்டை விலை கொள்கை ஆன்லைன் வர்த்தகத்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை அகற்ற வேண்டும்.
- ஒரே நாடு, ஒரே வரி முழக்கம் தணிக்கை செய்யப்பட்ட வரிவிதிப்புக்கு அபராதம் தவிர்க்க வேண்டும்.
- ஜி.எஸ்.டி (GST) உணவுப் பாதுகாப்பு சட்டங்களில் உள்ள முரண்பாடுகள் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
- சுங்கசாவடிகள் அகற்றப்பட வேண்டும்.
- டெல்டா மாவட்டங்களோடு தென் மாவட்டங்களை இணைத்து பயணிகள் ரயில் போக்குவரத்து இயக்கிட வேண்டும்
இம்மாநாட்டில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "இன்னும் இரண்டு மாதத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன சொல்கிறாரோ? அதை மத்திய அரசு செய்யும் நிலை உருவாகும். உங்களின் பிரச்சனைகளுக்கு முதலமைச்சர் உடனுக்குடன் தீர்வு காண்பார்.
வணிகர்கள் எந்தவித கோரிக்கைகள் வைத்தாலும் அதை நிறைவேற்றும் அரசாக இது இருக்கும். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும், அது நமது மாநாடு என்று கூறினார். நான் வணிகன் என்கிற முறையில் சரியான திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களுக்கு நிறைவேற்றித் தருவார் என்று உறுதி அளிக்கிறேன்" என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் மூர்த்தி, "தமிழக முதலமைச்சர் 'திராவிட மாடல்' ஆட்சி நடத்தினாலும், வணிகர்களுக்கு எப்போதும் துணையாக இருந்து கோரிக்கையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். தூத்துக்குடி வெள்ளத்தின்போது வணிகர்கள் கூட்டுறவு சங்கத்தின் வாயிலாக குறைந்த வட்டியில் கடன் வேண்டும் என்று கேட்டார்கள், 80 சதவீதத்திற்கு வட்டி இல்லாத திட்டத்தை நிறைவேற்றினோம்.
வணிகர்கள் ரூ.80 லட்சம் ஆக இருந்ததை ஒரு கோடியாக மாறியதற்கு வணிகர்கள் மீது நாங்கள் கொண்டுள்ள அக்கறை. வணிகர்கள் மீதும் சிறு வியாபாரிகள் மீது தவறான நடவடிக்கைகள் தொடர்ந்தால் அதிகாரிகள் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இந்த மூன்று ஆண்டு காலத்தில் வணிகர்களிடத்தில் நான் ஒரு டீ கூட இலவசமாக குடித்ததில்லை. அதிகாரிகள் கையூட்டு ஒன்றிரண்டு இடத்தில் பெற்றாலும், உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம். அடுத்த ஆண்டு விடுதலை முழக்கம் மாநாடாக இல்லாமல், நீங்கள் மௌனமாக எதைக் கேட்டாலும் தமிழக முதலமைச்சர் உங்களுக்கு செய்து கொடுப்பார்.
தமிழ்நாட்டில் நீங்கள் போராட வேண்டியதில்லை. உங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது தான், அரசின் வருமானம் கூடும். எனவே, உங்களை எங்கள் பிள்ளையாக நாங்கள் பார்த்துக் கொள்வோம். வணிகர்களின் பாதுகாவலனாக மு.க.ஸ்டாலின் இருப்பார்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் அமைச்சர், அதிகாரிகள்" - முதலமைச்சருக்கு போராசிரியர்கள் கூட்டமைப்பு வைக்கும் கோரிக்கை!