சேலம்: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகர்மன்ற தலைவர் சகுந்தலா கட்டபொம்மன் உட்பட திமுகவின் மூன்று முக்கிய நிர்வாகிகள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இல்லத்தில், முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அதிமுக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் ஏற்பாட்டில், திமுகவைச் சேர்ந்த மதுரை மாவட்ட உசிலம்பட்டி நகர்மன்ற தலைவர் சகுந்தலா கட்டபொம்மன் தலைமையில் திமுக முன்னாள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சோலை ரவி, மதுரை தெற்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் விஜய் ஆகியோர் இன்றைய தினம் அக்கட்சியிலிருந்து விலகி பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது புதிதாகக் கழகத்தில் இணைந்தவர்களை பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், மகேந்திரன், சரவணன், ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்கள் வெற்றிவேல், தன்ராஜ், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சிடிஆர். நிர்மல் குமார், மாநில மருத்துவர் அணி செயலாளர் விஜய பாண்டியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இணைப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, மூன்று பேரும் செய்தியாளர்களுக்குக் கூட்டாகப் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், "திமுகவில் மேல்மட்டத்தில் உள்ள தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களைப் போன்றவர்களைச் செயல்பட விடாமல் முட்டுக்கட்டை போடுகின்றனர்.
இது தொடர்பாகத் தலைமை கழக நிர்வாகிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் திமுகவைப் பொறுத்தவரை உயர் மட்ட தலைவர்களைச் சந்திப்பது சாத்தியமில்லாத விஷயம். ஆனால் அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை எளிதாகச் சந்திக்க முடியும்.
மேலும், எங்களைப் போன்ற அதிருப்தியாளர்கள் எங்கள் உறவினர்கள் என ஏராளமானோர் அதிமுகவில் இணைய உள்ளனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளரை எங்கள் தொகுதியில் வெற்றி பெறச் செய்வதற்காக பணியாற்றுவோம்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 2024 ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தலா? - டெல்லி தேர்தல் ஆணையம் விளக்கம்!