மதுரை: தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியான நிலையில், தேர்வெழுதிய 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேரில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் 91.55 சதவீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
இந்நிலையில், மதுரையில் உசிலம்பட்டி அருகே அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த விவசாய கூலி தொழிலாளி மகளான சுஸ்யா இன்று வெளியான பொதுத் தேர்வில் 500க்கு 497 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் உறவினர்கள் என பலரும் பாராட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மாணவி சுஸ்யாவின் தந்தை கூலி தொழிலாளியாக உள்ளார். தாயார் அங்கன்வாடியில் பணியாளராக பணியாற்றி வருகிறார். தனது இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த எனது ஆசிரியர்களுக்கு எனது நன்றினை தெரிவித்துக்கொள்கிறேன். தனது பெற்றோரும், ஆசிரியர்களும் தொடர்ந்து அளித்த ஊக்கத்தின் காரணமாகவே தான் இந்த சாதனை படைத்ததாகவும், தனது குடும்பத்தினரின் ஆசைப்படி மருத்துவர் ஆவதே தனது லட்சியம் என மாணவி சுஸ்யா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு எப்போது? விடைத்தாள் நகல் பெறுவது எப்படி? - 10th Supplementary Exam Date